டிசாருவில் 90 ஹெக்டர் பரப்பளவில் எரியும் காட்டுத்தீ

தீயை அணைக்க நான்கு நாள்களாகப் போராடும் தீயணைப்பாளர்கள்

டிசாருவில் 90 ஹெக்டர் பரப்பளவில் எரியும் காட்டுத்தீ

1 mins read
2bd4872e-522f-4b5c-954a-8985c3ca0412
ஜோகூர் மாநிலம், டிசாரு பகுதியில் கிட்டத்தட்ட 150 ஹெக்டர் பரப்பளவில் பரவிய தீயில் 40 விழுக்காட்டு தீ மட்டுமே அணைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய பகுதி இன்னும் எரிந்துகொண்டிருக்கிறது. - படம்: சினார் டெய்லி

கோத்தா திங்கி: டிசாரு-பெங்கெராங் நெடுஞ்சாலையைஒட்டி கடந்த சனிக்கிழமை முதல் எரிந்துகொண்டிருக்கும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்புப் படையினர் நான்காவது நாளாகத் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.

கிட்டத்தட்ட 150 ஹெக்டர் பரப்பளவில் பரவிய தீயில், திங்கட்கிழமை (மார்ச் 23) மாலை 6.30 மணி நிலவரப்படி ஏறக்குறைய 90 ஹெக்டர் நிலப்பரப்பில் தீ இன்னும் எரிந்து கொண்டிருப்பதாக ஜோகூர் மாநில தீயணைப்பு, மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

மார்ச் 21ஆம் தேதி இரவிலிருந்து காட்டுத் தீ எரிவதாகக் கூறப்பட்டுள்ளது. காய்ந்த புதர்கள் நிறைந்த நிலப்பரப்பு என்பதால், பலத்த காற்றினால் தீ அதிவேகமாகப் பரவி வருவதாக அதிகாரிகள் கூறினர்.

இதுவரை ஏறக்குறைய 60 ஹெக்டர் அல்லது 40 விழுக்காட்டுட் பரப்பளவிலான தீ மட்டுமே அணைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 60 விழுக்காட்டுப் பகுதியில் எரியும் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

ஏழு தீயணைப்பு வீரர்கள் 700 அடி நீளமுள்ள நீர்க் குழாய்களையும் கருவிகளையும் கொண்டு தீயை அணைக்கப்போராடி  வருகின்றனர்.
ஏழு தீயணைப்பு வீரர்கள் 700 அடி நீளமுள்ள நீர்க் குழாய்களையும் கருவிகளையும் கொண்டு தீயை அணைக்கப்போராடி வருகின்றனர். - படம்: மீடியாகார்ப்

புகைமூட்டத்தால் விரைவுச்சாலை மூடல்

காட்டுத் தீயினால் ஏற்பட்டுள்ள புகைமூட்டம் புங்காய் விரைவுச்சாலைப் பகுதியைப் பாதித்துள்ளது. சாலைப் பயணிகளின் பாதுகாப்பைக் கருதி, செபானா கோவ் நோக்கிச் செல்லும் அப்பாதையைக் காவல்துறையினர் தற்காலிகமாக மூடியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் இதுவரை உயிர்ச்சேதம் ஏதும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

குறிப்புச் சொற்கள்