தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மேற்கு ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ; வீடுகள், வாகனங்கள் தீக்கிரை

1 mins read
b827715c-e441-4591-b0d4-d637330d3c78
தீயில் 10 வீடுகள், நான்கு கொட்டகைகள், சில வாகனங்கள் ஆகியவை அழிந்தன. - படம்: ஏஎஃப்பி

சிட்னி: மேற்கு ஆஸ்திரேலியா, பெர்த் நகரின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 10 வீடுகள் அழிந்தன. பலர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

வியாழக்கிழமை ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க ஆஸ்திரேலியத் தீயணைப்பு வீரர்கள் போராடினர். தீயணைப்புச் சேவைகள் அவசரகால எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.

முடிந்தால் வீடுகளை விட்டு வெளியேறுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

விமானங்களின் ஆதரவோடு 500க்கும் மேற்பட்ட அவசரகால ஊழியர்கள் கட்டுக்கடங்காத தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீயில் 10 வீடுகள், நான்கு கொட்டகைகள், சில வாகனங்கள் ஆகியவை அழிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

வெப்பநிலை பகல்நேரத்தில் 40 டிகிரி செல்சியசை எட்டும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு வீரர்கள் புகை நிரம்பிய சாலைகளைக் கடக்க சிரமப்பட்டதைத் தொலைக்காட்சிப் படங்கள் காட்டின.

தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறிய குழந்தைகள் உள்ளிட்ட 130 பேர் மீட்பு நிலையத்தில் இரவு முழுதும் தங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீயைக் கட்டுக்குள் கொண்டுவர சில நாள்கள் எடுக்கும் என்று தீயணைப்பு, அவசரகால சேவைகள் பிரிவுத் தலைவர் டேரன் கிலேம் கூறினார்.

மேற்கு ஆஸ்திரேலியாவில் மேலும் 65 காட்டுத் தீச்சம்பவங்கள் ஏற்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.

ஆஸ்திரேலியாவின் இளவேனிற்கால வெப்ப அலையால் பெர்த் நகரம் முழுதும் காட்டுத் தீச்சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்