ஜப்பானின் ஒட்சுச்சியில் ஐந்தாவது நாளாக கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ

ஜப்பானின் ஒட்சுச்சியில் ஐந்தாவது நாளாக கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ

2 mins read
da9ca5a2-17e0-4a61-865c-e6f90447b6fb
ஜப்பானின் ஒட்சுச்சி பகுதியில் ஐந்தாவது நாளாகக் காட்டுத்தீ எரிகிறது. - படம்: இன்சுரன்ஸ் பிசினஸ்

ஒட்சுச்சி: ஜப்பானில் தொடர்ந்து ஐந்தாவது நாளாகக் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த 1,400 தீயணைப்பாளர்களும் 100 தற்காப்புப் படை அதிகாரிகளும் போராடிவருகின்றனர்.

இவாட்டே மாநிலத்தின் ஒட்சுச்சி மலைப் பகுதியில் மூண்ட காட்டுத்தீயில் இதுவரை 1,373 ஹெக்டர் பரப்பளவு நிலம் பொசுங்கியது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,541 வீடுகளிலிருந்து 3,233 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். அது ஒட்சுச்சி மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு.

தொடர் வறட்சி, பலத்த காற்று தீயைப் பரப்புகின்றன

“தற்காப்புப் படை அதிகாரிகள் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்கின்றனர். ஆனால் வறட்சியான வானிலையும் பலத்த காற்றும் தீயை ஊதி பெரிதாக்குகின்றன,” என்றார் ஒட்சுச்சி மேயர் கோஸோ ஹிரானோ.

அதிகாரிகள் பலர் ஹெலிகாப்டர்களிலிருந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அதிகாரிகள் கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்கின்றனர்.
ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அதிகாரிகள் கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்கின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்

காட்டுத்தீயால் ஏற்படக்கூடிய மிகப் பெரிய பாதிப்புகளை எண்ணி வருத்தமடைந்துள்ளதாக ஒட்சுச்சி குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

“சுனாமி வந்தால்கூட பேரிடருக்குப் பிறகு ஏதாவது எஞ்சியிருக்கும். ஆனால், தீ அனைத்தையும் எரித்து சாம்பலாக்கிவிடும்,” என்றார் 74 வயது யோ‌ஷினொரி கோமாட்சு.

இதற்குமுன் 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம், நிலநடுக்கமும் சுனாமியும் ஒட்சுச்சி வட்டாரத்தை உலுக்கியதில் அங்கு பத்தில் ஒருவர் மாண்டார்.

இந்நிலையில், பாதுகாப்பு மையத்தில் ஒருவர் தவறி விழுந்ததால் லேசான காயம் ஏற்பட்டது என்ற ஜப்பானின் தீயணைப்பு, பேரிடர் நிர்வாக அமைப்பு, அதைத் தவிர யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை என்றது.

ஞாயிற்றுக்கிழமையும் திங்கட்கிழமையும் ஒட்சுச்சி வட்டாரத்தில் மழை பெய்வதாகத் தெரியவில்லை என்றும் செவ்வாய்க்கிழமை லேசான மழை பெய்யக்கூடும் என்றும் ஜப்பானின் வானிலை ஆய்வகம் தெரிவித்தது.

காட்டுத் தீ மூண்டதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

ஒட்சுச்சி மலைப் பகுதியில் மூண்ட காட்டுத்தீயில் 1,373 ஹெக்டர் பரப்பளவு நிலம் கருகியது.
ஒட்சுச்சி மலைப் பகுதியில் மூண்ட காட்டுத்தீயில் 1,373 ஹெக்டர் பரப்பளவு நிலம் கருகியது. - படம்: ஜப்பான் டைம்ஸ்
குறிப்புச் சொற்கள்