பிரான்ஸ், ஸ்பெயினில் காட்டுத்தீ: 200,000க்கும் அதிகமானோர் வெளியேற்றம்

பிரான்ஸ், ஸ்பெயினில் காட்டுத்தீ: 200,000க்கும் அதிகமானோர் வெளியேற்றம்

1 mins read
4ab3ad11-a295-4d30-a246-8cc63a3a01d7
ஜூலை 24ஆம் தேதி, பிரான்சின் தென்மேற்குப் பகுதியில் உள்ள அண்டர்னோஸ் நகரில், காப் ஃபெரெ தீவில் பரவிய காட்டுத்தீயிலிருந்து எழும்பிய புகை வீடுகளுக்குமேல் சூழ்ந்தது. - படம்: இபிஏ

பாரிஸ்/மட்ரிட்: பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பரவிவரும் காட்டுத்தீ காரணமாக 200,000க்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர்.

கடுமையான வெப்ப அலை, பருவநிலை மாற்றம் உள்ளிட்டவை காரணமாக ஏற்பட்டுள்ள காட்டுத்தீ, பிரான்சின் ஜிரோண்டே, லாண்டெஸ் வட்டாரங்களிலும் ஸ்பெயினின் மத்தியப் பகுதிகளிலும் கட்டுப்பாடின்றிப் பரவி வருகிறது.

பிரான்சில் போர்டோ நகரை நோக்கித் தீ வேகமாகப் பரவி வரும் நிலையில், ஜிரோண்டே பகுதியிலிருந்து மட்டும் 110,000க்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டனர்.

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 42 தீயணைப்புப் படையினர் காயமடைந்துள்ளதாகப் பிரஞ்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஸ்பெயினில் தலைநகர் மட்ரிட், குவாடலஹாரா ஆகிய வட்டாரங்களில் காட்டுத்தீ தீவிரமடைந்துள்ளதால், இதுவரை 320 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான நிலங்கள் கருகின.

அங்குள்ள உள்நாட்டு அமைச்சு 60,000க்கும் அதிகமான குடியிருப்பாளர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியுள்ளது.

மேலும், காட்டுத்தீக்கான முதலாவது தேசிய அவசரநிலையை ஸ்பானியப் பிரதமர் பெட்ரோ சான்செஸ் அறிவித்துள்ளார்.

நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் பிரான்சும் ஸ்பெயினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியை நாடியுள்ளன.

பிரஞ்ச் அதிபர் இமானுவேல் மெக்ரோன் அவசரகால மீட்புக் குழுவை முடுக்கிவிட்டதோடு மட்டுமன்றி, ராணுவப் படைகளையும் களத்தில் இறங்கியுள்ளார்.

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும், காட்டுத்தீப் பேரிடருக்கு நிரந்தரத் தீர்வு காணவும் அரசியல் ரீதியிலான கூட்டு நடவடிக்கை தேவை என ஸ்பானியப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற நாடுகள் விமானங்கள், ஹெலிகாப்டர்களை அனுப்பித் தீயணைப்புப் பணிகளுக்கு உதவி வருகின்றன.

குறிப்புச் சொற்கள்
பிரான்ஸ்ஸ்பெயின்காட்டுத் தீ