கிரீசில் காட்டுத்தீ

கிரீசில் காட்டுத்தீ

1 of 3
படம்: ராய்ட்டர்ஸ்
படம்: ராய்ட்டர்ஸ்
படம்: ராய்ட்டர்ஸ்

01 Aug 2026 - 7:22 pm

1 mins read

ஏதன்ஸ்: பலத்த காற்றினால் கிரீஸ் நாட்டின் பல இடங்களில் காட்டுத்தீ மோசமடைந்துள்ளது.

தலைநகர் ஏதன்சுக்கு அருகே உள்ள பகுதியிலும் காட்டுத்தீ எரிகிறது.

பெரிய அளவில் தீயணைப்பு நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மக்களை அவசரமாக வெளியேற்றும் பணிகளும் தொடர்கின்றன.

அதோடு, ஸ்பெயினிலும் பிரான்சிலும் சில பகுதிகளில் காட்டுத்தீ மறுபடியும் மோசமடைந்துள்ளது.

இவ்வாண்டு கோடைக்காலத்தில் ஐரோப்பா தொடர்ந்து வரலாறு காணாத அளவில் அதிக வெப்பநிலைக்கு உள்ளாகியிருக்கிறது.

அங்கு அதிக மழையும் இல்லை.

அதனால், ஐரோப்பா காட்டுத்தீயால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், ஸ்பெயின் ஆகியவற்றில் உள்ள பல கிராமங்கள் காட்டுத்தீயால் அழிக்கப்பட்டுள்ளன. நூறாயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்தும் விடுமுறையின்போது தங்கியிருந்த இடங்களிலிருந்தும் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

கிரீஸ் முழுவதும் பலத்த காற்றின் உந்துதலோடு காட்டுத்தீ மோசமடைந்தது. கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை கிரீசில் அனல் காற்று அதிகம் இல்லாதிருந்தது.

கிரீசின் பல இடங்களுக்கு சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அட்டிக்கா, இவியா பகுதிகளில் காட்டுத்தீ மிக மோசமாக எரியக்கூடிய அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டது.

போயீ‌ஷியா பகுதியில் ஏற்பட்ட மோசமான தீயை அணைக்க 92 தீயணைப்பு லாரிகள், கனரக இயந்திரங்கள் உள்ளிட்டவற்றுடன் 300 தீயணைப்பாளர்கள் போராடிவருகின்றனர். கிரீசின் மற்ற இடங்களிலும் தீயணைப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

குறிப்புச் சொற்கள்