பாரிஸ்: கணக்கெடுப்பில் இடம்பெறும் விலங்குக் கூட்டங்களில் எண்ணிக்கை கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் 70 விழுக்காட்டுக்கும் மேல் சரிந்துள்ளது.
உலக வனவிலங்கு நிதியம் (WWF) வியாழக்கிழமையன்று (அக்டோபர் 10) வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் தெரிய வந்துள்ளது.
கணக்கெடுப்பில் 5,000க்கும் மேற்பட்ட விலங்கு வகைகளை உள்ளடக்கிய 35,000 வனவிலங்குக் கூட்டங்களுக்கான புள்ளி விவரங்கள் இடம்பெற்றுள்ளன. உலகளவில் விலங்கு எண்ணிக்கை பெரிய அளவில் குறைவதை டபிள்யுடபிள்யுஎஃப் லிவிங் பிளானட் (WWF Living Planet) குறியீடு காட்டுகிறது.
லத்தீன் அமெரிக்க கண்டம், கரிபிய வட்டாரம் போன்ற பல்லுயிர் வகைகள் அதிகம் காணப்படும் பகுதிகளில் விலங்குத்தொகை 95 விழுக்காடு வரை குறைந்துள்ளது.
உலக வனவிலங்கு நிதியின் அறிக்கை, விலங்குகளின் தனிப்பட்ட எண்ணிக்கையைக் கணக்கிடுவதில்லை. அது, அதிக எண்ணிக்கையில் உயிர் வாழும் விலங்குக் கூட்டங்களைக் கருத்தில்கொள்கிறது.
அந்த வகையில், 1970ஆம் ஆண்டிலிருந்து கணக்கெடுப்பில் உட்படுத்தப்படும் விலங்குக் கூட்ட எண்ணிக்கை 73 விழுக்காடு சரிந்துள்ளதை அறிக்கை தெரிவித்தது. பெரும்பாலும் மனிதர்கள் தரும் நெருக்கடிகள்தான் அதற்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டபிள்யுடபிள்யுஎஃப் லிவிங் பிளானட் குறியீடு, அனைத்துலக அளவில் விலங்குகள் தொடர்பிலான நிலவரத்தைக் கணிப்பதற்கான குறியீடாக விளங்குகிறது. பல்லுயிரியல் தொடர்பில் ஐக்கிய நாட்டு நிறுவனம் நடத்தவிருக்கும் மாநாட்டுக்கு முன்பு உலக வனவிலங்கு நிதியின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
இம்மாதப் பிற்பகுதியில் கொலம்பியாவில் நடைபெறவுள்ள அந்த மாநாட்டில் வனவிலங்கு எண்ணிக்கை சரிந்தது பற்றி முக்கியமாகப் பேசப்படும்.
தொடர்புடைய செய்திகள்
“அந்த நிலவரம் பெரிதும் கவலைக்குரியது,” என்று உலக வனவிலங்கு நிதியின் அனைத்துலகப் பிரிவுத் தலைமை இயக்குநர் கர்ஸ்ட்டன் ஷுயிச்ட் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் கூறினார்.
“இது வனவிலங்குகளைப் பற்றியது மட்டுமல்ல, மனித வாழ்க்கைத் தொடர வகைசெய்யும் முக்கிய இயற்கைச் செயல்முறைகளையும் சார்ந்தது,” என்றார் உலக வனவிலங்கு நிதியின் தலைமை அதிகாரியான டாவ்டி சும்பா.
“இந்த மாற்றங்கள் சரிசெய்ய முடியாதவையாகப் போகலாம். அது மனித இனத்துக்கு மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தலாம்,” என்றும் அவர் எச்சரித்தார்.