லண்டன்: மரணப் படுக்கையில் இருந்த 76 வயது மார்கரெட் பேவர்ஸ்டோக் என்பவரது மொத்த சொத்துகளையும் அவரின் மகள் உயில் ஒன்றில் கையெழுத்து வாங்கிக்கொண்ட காணொளி ஒன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
கண்ணிமைக்கக்கூட பலம் இல்லாத நிலையில் இருந்த அந்த மூதாட்டியிடம் 55 வயது லிசா கையெழுத்து வாங்கியதுடன் மகனுக்குச் சொத்து எதுவும் கிடைக்காத வகையில் அந்த உயிலை அமைத்திருந்தார்.
உயிலில் கையெழுத்திட்டபின் எட்டே நாள்களில் அந்த மூதாட்டி உயிரிழந்தார். தென் லண்டனில் உள்ள மார்கரெட்டின் வீடு உட்பட லிசாவுக்கே சொத்துகள் அனைத்தும் போய்ச் சேர்ந்ததாக ‘த சன்’ நாளிதழ் குறிப்பிட்டது.
இதை ஏற்றுக்கொள்ள மறுத்த ஜான் என்ற அந்த மூதாட்டியின் மகன், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த உயில் தம் தாயாரின் இறுதி முடிவாக இருக்க முடியாது என்று அவர் வாதிட்டார். காணொளியை ஆதாரமாக ஏற்றுக்கொண்டதை அடுத்து உயில் செல்லுபடியாகாது என்று நீதிபதி தீர்ப்பளித்துவிட்டார்.
அத்துடன், இறந்தவரின் சொத்துகளில் பாதி ஜானுக்குப் போய்ச் சேரும் என்றும் கூறினார்.
மார்கரெட்டுக்கு முதுமைக்கால மறதிநோய் இருப்பதாக 2014ஆம் ஆண்டில் உறுதிசெய்யப்பட்ட நிலையில், 2021ஆம் ஆண்டு அவர் மரணப் படுக்கையில் கிடந்தபோது இந்த உயில் கையெழுத்தானது.
மேலும், தங்களின் தாயார் இறப்பதற்கு முன் தம் தாயாரைச் சந்திக்க விடவில்லை என்று ஜான் தம் தங்கையைக் குற்றம் சாட்டியும் இருந்தார். காணொளியை லிசா ஆதாரமாகச் சமர்ப்பித்தபோதும், அதே காணொளியில் மூதாட்டி கட்டாயப்படுத்தப்பட்டு கையெழுத்திட்டதாகத் தெரிவதை நீதிபதி கவனித்தார்.
இந்நிலையில், 2019ஆம் ஆண்டிலிருந்து மூதாட்டியை முழுநேரமாகப் பார்த்துக்கொள்ளத் தொடங்கிய லிசா, தாயாரின் நிலை குறித்து ஜான் எவ்வித அக்கறையும் காட்டவில்லை என்று குறை கூறியிருந்தார். ஜான் அதற்கு மாறாகத் தாம் தாயாரைச் சந்திக்க லிசா அனுமதிக்கவில்லை என்றார்.

