தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நியூயார்க் சிட்டியில் மழையையும் பனியையும் கொண்டுவந்துள்ள குளிர்காலப் புயல்

1 mins read
9a8e8e44-a751-47b3-b428-8ad84f2497f8
நியூவார்க், வாஷிங்டன், போஸ்டன் உள்ளிட்ட அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதிகளில் குறைந்தது 332 விமானச் சேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: நியூயார்க் சிட்டியில் ஜனவரி 6ஆம் தேதி லேசான பனிமழை பொழிந்தது.

அமெரிக்காவின் கிழக்குக் கடலோரப் பகுதியை ஏறக்குறைய ஓராண்டுக்குப் பிறகு முதல்முறையாக குளிர்காலப் புயல் தாக்கியுள்ளது. அதன் காரணமாக நூற்றுக்கணக்கான வாரயிறுதி விமானச் சேவைகள் ரத்துசெய்யப்பட்டன. சில ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.

நியூயார்க் சிட்டியில் கிட்டத்தட்ட 2.5 செண்டிமீட்டரிலிருந்து 5 செண்டிமீட்டர் வரையிலான பனி பொழியும் என்றும் அதன் பிறகு இரவில் மழை பெய்யும் என்றும் தேசிய வானிலை சேவை முன்னுரைத்தது. நகரின் வடக்கு, மேற்குப் பகுதிகளில் பனியின் அளவு வெகுவாக அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டது.

முன்னதாக, பிலடெல்ஃபியாவிலும் நியூயார்க் சிட்டியிலும் இதுவரை இல்லாத அளவில் குறைவான பனிப்பொழிவு பதிவாகியிருந்தது. ஆனால் தற்போதைய புயல் அதனை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்திருப்பதாக அமெரிக்க வானிலை முன்னுரைப்பு நிலையத்தின் முன்னுரைப்பாளர் ஆஷ்டன் ராபின்சன் கூக் கூறினார்.

ஜனவரி ஐந்தாம் தேதிவரை, நியூயார்க்கின் மத்திய பூங்காவில் 691 நாள்களுக்கு 2.5 செண்டிமீட்டர் அல்லது அதற்கும் குறைவான அளவில் மட்டுமே பனிப்பொழிவு பதிவாகியிருந்தது.

இந்நிலையில் பிலடெல்ஃபியாவில் புயல், பனிப்பொழிவுடன் தொடங்குகிறது. கடந்த வெள்ளிக்கிழமை வரை, அங்கு 705 நாள்களுக்கு 2.5 செண்டிமீட்டர் அல்லது அதற்கும் குறைவான அளவில் மட்டுமே பனிப்பொழிவு பதிவாகியிருந்தது.

நியூவார்க், வாஷிங்டன், போஸ்டன் உள்ளிட்ட அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதிகளில் குறைந்தது 332 விமானச் சேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்