வான்குடை சாகசத்தில் ஈடுபட்ட 87 வயது மாது

1 mins read
a84ff543-d8e2-4d7e-aa18-188851247350
திருவாட்டி தொங், 87, வான்குடையூர்தியில் பறந்தபோது பதற்றமின்றி இருந்ததாகக் கூறப்பட்டது. - படம்: கிறிஸ் பேராகிளைடிங்/ஃபேஸ்புக்

கோத்தா கினபாலு: மலேசியாவின் சாபா மாநிலம், ரானாவ் நகரில், வான்குடையூர்தியைச் (பேராகிளைடிங்) செலுத்தும் பணியில் இருக்கும் கிறிஸ் லெம்மர்ட் என்பவர், ஜூலை 17ஆம் தேதி வேலைக்குச் சென்றபோது எப்போதும்போல் இளையர்கள் கூடியிருப்பார்கள் என எதிர்பார்த்தார்.

‘பேராகிளைடிங்’ சாகச நடவடிக்கையில் அதனைச் செலுத்துபவரும் பயணி ஒருவரும் இருப்பர்.

அதனால், இளையர்களுக்குப் பதிலாக 87 வயது மாதைக் கண்டதும் அவர் வியப்படைந்தார்.

திருவாட்டி தொங், ஐம்பது வயது மதிக்கத்தக்க தன் மகளை ஊக்கப்படுத்துவதற்காகத் தான் முதலில் வான்குடையூர்தியில் செல்ல முன்வந்தார்.

இதன் தொடர்பில் திரு லெம்மர்ட் தமது சமூக ஊடகப் பக்கத்தில் இரண்டு காணொளிகளை வெளியிட்டார். அவற்றைப் பற்றி இணையத்தில் கருத்து தெரிவித்த சிலர் ஆச்சரியப்பட்டனர். அவர்கள் அந்த மாதின் துணிவைப் பாராட்டினர்.

திருவாட்டி தொங் வான்குடையூர்தியில் பறந்துகொண்டிருந்தபோது பதற்றமின்றி இருந்ததாகத் திரு லெம்மர்ட் கூறினார்.

ரானாவில் 2014ஆம் ஆண்டில் வான்குடையூர்தி நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து, அதன் வாடிக்கையாளர்களில் 80 விழுக்காட்டினர் பெண்கள், 10 விழுக்காட்டினர் பிள்ளைகள், எஞ்சியுள்ள 10 விழுக்காட்டினர் ஆண்கள் என்று திரு லெம்மர்ட் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்