ஆவேசத்தில் காதலனின் ஆணுறுப்பை வெட்டிய பெண்

ஆவேசத்தில் காதலனின் ஆணுறுப்பை வெட்டிய பெண்

28 Feb 2023 - 4:10 pm

2 mins read

தம்முடன் படுக்குமாறு காதலனின் வற்புறுத்தலுக்கு இணங்க பெண் மறுத்துவிட்டதால், தாங்கள் பாலியல் உறவில் ஈடுபடுவதைக் காட்டும் காணொளிகளை வெளியிடப்போவதாக காதலன் மிரட்டினார்.

இதனால் கோபமடைந்த அந்த 28 வயது இந்தோனீசியப் பெண், காதலனின் ஆணுறுப்பை வெட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்தோனீசியாவின் வடக்கு சுமத்ராவில் உள்ள ஹோட்டல் அறையில் பிப்ரவரி 25ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்ததாக இந்தோனீசிய ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

அவ்விருவருக்கும் ஒருவரையொருவர் ஏழு மாதங்களாக தெரியும். அந்தப் பெண்ணுடன் அந்த 28 வயது ஆடவர் பாலியல் உறவுகொள்ள விரும்பினார். ஆனால், காதலனுடன் படுக்க அந்தப் பெண்ணுக்கு அப்போது விருப்பம் இல்லாததாக காவல்துறை கூறியது.

தனது கோரிக்கைக்கு இணங்க காதலி மறுத்துவிட்டதால், தாங்கள் நெருக்கமாக இருப்பதைக் காட்டும் காணொளியை வெளியிடப்போவதாக காதலன் மிரட்டினார்.

"அந்த ஆடவர் குளிக்கத் தயாராகிக்கொண்டு இருந்தபோது, அந்த மாது வெறிச்செயலில் ஈடுபட்டார். அந்த ஆடவருக்குச் சொந்தமான கத்தியை எடுத்து அவருடைய ஆணுறுப்பை அந்த மாது வெட்டிவிட்டார்," என்று காவல்துறைத் தலைவர் டரியோனோ ரஜார்ஜா சொன்னார்.

சம்பவத்துக்குப் பிறகு, உதவி கோரி அந்தப் பெண் தம்மிடம் வந்ததாக அந்த ஹோட்டலின் வரவேற்பாளர் கூறினார்.

பாதிக்கப்பட்ட அந்த ஆடவர் வலியில் துடித்ததாகவும் அவரது உடலிலி இருந்து அதிக ரத்தம் சிந்தியதாகவும் அந்த வரவேற்பாளர் சொன்னார்.

அந்த ஆடவர், தற்போது அருகிலுள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.

அந்தப் பெண் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் மீது இன்னும் குற்றஞ்சாட்டப்படவில்லை. காயமுற்ற ஆடவரை விசாரிக்க தாங்கள் காத்திருப்பதாக காவல்துறையினர் கூறினர்.