ஜோகூரில் ஒரே நாளில் இரண்டு கொலை; ஒரு வயது மகனைத் தாயே கொன்றதாக ஐயம்

ஜோகூரில் ஒரே நாளில் இரண்டு கொலை; ஒரு வயது மகனைத் தாயே கொன்றதாக ஐயம்

1 mins read
834ca124-7be9-41e7-8cd3-9d3a1c7a8020
மாதிரிப்படம்: - பிக்சாபே

ஜோகூர் பாரு: தன் ஒரு வயது மகனைக் கழுத்தை அறுத்துக் கொன்ற சந்தேகத்தின் பேரில் மலேசியாவின் ஜோகூர் மாநிலம், பாசிர் கூடாங்கில் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் சனிக்கிழமை (மார்ச் 16) பிற்பகல் 1.30 மணியளவில் நிகழ்ந்ததாகவும் அப்பெண்ணின்மீது வழக்கு பதிந்துள்ளதாகவும் ஜோகூர் மாநிலக் காவல்துறை ஆணையர் எம்.குமார் தெரிவித்தார்.

“குழந்தையின் 32 வயது தாயைக் கைதுசெய்து விசாரித்து வருகிறோம். சம்பவ இடத்திலிருந்து கத்தி ஒன்றையும் கைப்பற்றி உள்ளோம். கழுத்து அறுபட்டு, ரத்தம் படிந்த நிலையில் குழந்தையின் படத்தை வாட்ஸ்அப் வழியாக அப்பெண் தன் கணவனுக்கு அனுப்பியது தெரியவந்துள்ளது,” என்று ஞாயிற்றுக்கிழமையன்று (மார்ச் 17) திரு குமார் சொன்னார்.

இதனிடையே, ஜோகூரின் தாமான் ரிந்திங்கில் சனிக்கிழமை காலை 10.50 மணியளவில் 61 வயது ஆடவர் ஒருவர் பல வெட்டுக் காயங்களுடன் மாண்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக திரு குமார் தெரிவித்தார்.

“இதன் தொடர்பில் 35 முதல் 48 வயதிற்குட்பட்ட ஐவரைக் கைதுசெய்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.

இவ்விரு மரணங்களுக்கான காரணங்களைக் கண்டறிய காவல்துறை விசாரணையில் இறங்கியுள்ளது. அதனால், அவை குறித்து ஊகத் தகவல் எதையும் பரப்ப வேண்டாம் என்று காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்