கேன்பரா: தன்னை விட்டுச்சென்று விடக்கூடாது என்பதற்காக, ஓடுபாதைக்கு விரைந்தோடி, விமானத்தை நிறுத்த முயன்ற பெண்ணால் ஆஸ்திரேலியத் தலைநகர் கேன்பரா விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
விமான நிலையப் பாதுகாப்பை மீறி ஓடிச் சென்று, அவ்விமானத்தின் கீழே நின்றபடி, தன்னை விமானத்தினுள் அனுமதிக்கும்படி விமானியை நோக்கி அப்பெண் கையசைத்த சம்பவம் காணொளியாகப் பதிவுசெய்யப்பட்டது.
கடந்த புதன்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 7.30 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
அந்த குவான்டாஸ்லிங்க் விமானம் அடிலெய்டு நகருக்குப் புறப்படத் தயாராக இருந்தது.
விமான நிலையத்தில் இருந்தபடி கண்ணாடி வழியாக அப்பெண்ணின் செயலைக் கண்ட பலரும், அவரை ஒருவரும் தடுத்து நிறுத்தாதது கண்டு வியப்படைந்தனர்.
இதுகுறித்த காணொளியை டெனிஸ் பிலிச் என்பவர் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
இச்சம்பவத்தை நேரில் கண்ட சைமன் ஹேல்ஸ் என்பவர், “விமானியை நோக்கி அப்பெண் கத்தினார். அவரது கவனத்தை ஈர்க்கும் நோக்கில் குதித்தார். அவரது செயல் புதிராக இருந்தது,” என்று சொன்னார்.
மேலும், “விமானத்தைத் தவறவிட்ட ஒரு பெண், இன்னும் தன்னால் அதனைப் பிடித்துவிட முடியும் என்று உறுதியாக நம்பியதுபோல் தெரிந்தது. வெளிவாயில் கதவில் இருந்தவர்களைத் தள்ளிவிட்டு, விமானத்தை நோக்கி அவர் ஓடினார். நல்ல வேளையாக விமானி எச்சரிக்கப்பட்டிருக்கலாம். அல்லது அவரே பார்த்து, விமானத்தின் இயந்திரத்தை நிறுத்தியிருக்கலாம்,” என்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் திரு ஹேல்ஸ் விவரித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அப்பெண்ணின் செயல் காரணமாக கேன்பரா விமான நிலையத்தில் விமானச் சேவைகள் பத்து நிமிடங்கள் தாமதமாயின. பின்னர் அந்தப் பெண் கைதுசெய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் விசாரணை நடந்து வருவதாக ஆஸ்திரேலியாவின் ‘9நியூஸ்’ செய்தி தெரிவித்தது.