தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பேராக் சுல்தானை கட்டியணைக்க முற்பட்ட பெண்மீது குற்றச்சாட்டு

2 mins read
3cda46b3-d534-4f97-b6ca-f2091b99be40
மேடையில் நின்றுகொண்டிருந்த சுல்தான் நஸ்ரின் ஷாவை நோக்கி விரைந்து சென்று அவரை கட்டியணைக்க நூர்ஹஸ்வானி அஃப்னி முயன்றதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் இவரைத் தடுத்து நிறுத்தினர். - படம்: தி ஸ்டார்

ஈப்போ: மலேசியாவின் பேராக் மாநிலம், ஈப்போவில் ஆகஸ்ட் 31ஆம் தேதி மாநில அளவிலான சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது, பேராக் சுல்தான் நஸ்ரின் ஷாவை கட்டியணைக்க முற்பட்ட பெண்மீது குற்றஞ்சாப்பட்டுள்ளது.

மஞ்சோய் கிராமத்தைச் சேர்ந்த நூர்ஹஸ்வானி அஃப்னி முகம்மது சோர்கி, 41, நீதிபதி முகம்மது ஹரித் முகம்மது மஸ்லான் முன்னிலையில் மலேசியாவின் குற்றவியல் தண்டனைச் சட்டப்பிரிவு 352-ன்கீழ் திங்கட்கிழமை (செப்டம்பர் 8) குற்றஞ்சாட்டப்பட்டார்.

நூர்ஹஸ்வானி அஃப்னி, ஆகஸ்ட் 31ஆம் தேதி காலை 8.20 மணியளவில், ஜாலான் பங்லிமா புக்கிட் கண்டாங் வஹாப்பில் உள்ள ஈப்போ நகர மண்டபத்துக்கு முன்னால் இந்தக் குற்றத்தைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை, 1,000 ரிங்கிட் (S$300) வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குற்றஞ்சாட்டப்பட்டவர் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என விசாரணையின் கண்டுபிடிப்புகள் சுட்டிக்காட்டுவதாக துணை அரசு வழக்கறிஞர் நஸ்ருல் ஹாதி அப்துல் கனி கூறினார்.

“விசாரணையை எதிர்கொள்ள அவர் தகுதியானவரா என்பதைத் தீர்மானிக்க, ஒரு மாதத்திற்கு அவரைக் கண்காணிக்கும்படி கோருகிறோம்,” என்று திரு நஸ்ருல் கேட்டுக்கொண்டார்.

அந்தப் பெண்ணை ஒரு மாதகால கண்காணிப்புக்காக பஹாகியா உலு கிந்தா மருத்துவமனைக்கு அனுப்ப நீதிபதி ஹரித் உத்தரவிட்டார்.

வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபர் 8ஆம் தேதி நடைபெறும்.

சம்பவத்தின்போது, மாநில கீதம் இசைக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, நூர்ஹஸ்வானி அஃப்னி மேடையில் நின்ற சுல்தான் நஸ்ரின் ஷாவை நோக்கி விரைந்து சென்று அவரை கட்டியணைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் அவரைத் தடுத்து நிறுத்தினர்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, பேராக் காவல்துறைத் தலைவர் நூர் ஹிசாம் நூர்டின், அந்தப் பெண்ணுக்கு முன்னதாக போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் இருந்ததாகவும் அவர் மனநலப் பிரிவின் கண்காணிப்பில் இருந்ததாகவும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்