கோலாலம்பூர்: இடது புறமாக வேகமாக வளைந்த லாரி ஒன்று, கட்டுப்பாட்டை இழந்ததை அடுத்து அதன் சரக்குக் கொள்கலன் ஒரு பெண்ணின் கார் மீது விழுந்தது.
இச்சம்பவம் பினாங்கு மாநிலத்தில் நவம்பர் 13ஆம் தேதி நடந்தது. இன்னொரு வாகனமும் இந்த விபத்தில் சிக்கியது.
அதன் ஓட்டுநரான 25 வயது டான் சொவ் தெங் கடுமையான காயங்களுடன் அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், நசுங்கிய காரில் சிக்கியிருந்த திருவாட்டி லீ ஸி ரூ சம்பவ இடத்திலேயே மாண்டார்.
அந்தப் பெண் தமது இறுதித் தருணங்களில் அவரின் தாயாரைத் தொடர்புகொண்டதாகப் பெண்ணின் தாயார் ‘சைனா பிரஸ்’ நிறுவனத்திடம் கூறினார்.
“அம்மா! ரொம்ப வலிக்கிறது,” என்று தொலைபேசியில் கூறிய அந்த 21 வயதுப் பெண், பின்னர் எதுவும் பேசவில்லை.
தம் மகள் உயிரிழந்துவிட்டதை அப்போதே அந்தத் தாயார் உணர்ந்ததாக அவர் பேட்டியில் சொன்னார்.
ஏதேனும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே தம்மைத் தொடர்புகொள்ள வேண்டும் என்று அந்தத் தாயார் எப்போதும் தம் மகள்களுக்குக் கூறி வந்துள்ளதால், மகளிடமிருந்து அழைப்பு வந்தபோதே பயந்தவாறு பேசியதாகக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
மகள் வேலைக்குச் செல்லும் வழியிலேயே தம்முடைய இன்னொரு மகளுடன் விரைந்த அந்தத் தாயார், தம் மகள் காரோடு நசுங்கிய செய்தியை அங்கிருந்த ஒருவரிடமிருந்து அறிந்துகொண்டார்.
கொள்கலன் அதிக எடை கொண்டிருந்ததால் அதை நகர்த்துவதற்கான முயற்சிகளும் பலனளிக்கவில்லை.
“என் மகள் காலை 9.24 மணிக்கு அழைத்தார். 9.30 மணிக்குள் அவர் உயிரிழந்துவிட்டார்,” என்று அந்தத் தாயார் கூறினார்.
கவனக்குறைவாக வாகனமோட்டியதன் தொடர்பில் லாரியை ஓட்டிய 51 வயது ஆடவர் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

