யோக்கோஹாமா: ஜப்பானின் யோக்கோஹாமா நகரிலுள்ள புகழ்பெற்றதோர் உணவகத்தில் விலாங்கு மீன் உணவு உண்டபின் பெண் ஒருவர் உயிரிழந்துவிட்டார்; மேலும் கிட்டத்தட்ட 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உணவு நஞ்சாக மாறியதே இதற்குக் காரணம் என யோக்கோஹாமா நகரச் சுகாதார அதிகாரிகள் திங்கட்கிழமை (ஜூலை 29) தெரிவித்தனர்.
இதனையடுத்து, நிகோம்பாஷி உனாகி இசேசாடா என்ற அவ்வுணவகத்தைத் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டது.
அவ்வுணவகத்திற்குத் தலைநகர் தோக்கியோவிலும் கிளைகள் உள்ளன.
முதலில் ஜூலை 25ஆம் தேதி காலை இருவர் மட்டும் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற சோதனைகளில், அவ்வுணவகத்தில் விலாங்கு மீன் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ட பலருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது தெரியவந்தது.
பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகள், 90 வயதைத் தாண்டிய முதியோர் உட்பட குறைந்த 147 பேருக்குக் குமட்டலும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
அவர்களில் ஐவரின் கழிவில், தோல் மூலமாகப் பரவக்கூடிய நுண்ணுயிரி இருந்தது கண்டறியப்பட்டது.
பலருக்கும் இலேசான பாதிப்பே ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது, குறைந்தது இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 90 வயதுகளில் இருந்த பெண் ஒருவர் ஜூலை 25ஆம் தேதியன்றே மருத்துவமனையில் உயிரிழந்தார்.
தொடர்புடைய செய்திகள்
அவருக்கு ஏற்கெனவே நாட்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

