சிரம்பான்: சாலை விபத்தை அடுத்து, பெண் ஒட்டுநரைத் தாக்கியதாக மலேசிய ராணுவ வீரர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
குற்றச்சாட்டை எதிர்த்த 35 வயது அப்துல் ஹஃபிஸ் அபு பக்கர் வழக்கு கோரியுள்ளார்.
இந்த வழக்குடன் தொடர்புடைய விபத்து, தாக்குதல் மார்ச் மாதம் நிகழ்ந்தது.
மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநாட்டில் உள்ள செனாவாங் நகரில் மார்ச் 29ஆம் தேதி இரவு 10.20 மணி அளவில் அப்பெண் ஓட்டுநரை அப்துல் ஹஃபிஸ் குத்தியதாகக் கூறப்படுகிறது.
இதைக் காட்டும் 22 வினாடி காணொளி டிக்டாக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அப்துல் ஹஃபிசுக்கு ஓராண்டு சிறை, அதிகபட்சம் 2,000 ரிங்கிட் (S$600) அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
அபராத தொகையைக் குறைக்கும்படி அப்துல் ஹஃபிசின் வழக்கறிஞர் நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டார்.
அப்துல் ஹஃபிசுக்கு இரண்டு பிள்ளைகளும் வயதான பெற்றோரும் இருப்பதாகக் கூறிய அவரது வழக்கறிஞர், அவரை பிணையில் விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து, அப்துல் ஹஃபிஸ் 2,000 ரிங்கிட் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
மே 19ஆம் தேதியன்று அவர் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.
தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வலது விலா எலும்பில் காயம் ஏற்பட்டதாகவும் தலையின் பின் பகுதியில் வீக்கம் ஏற்பட்டதாகவும் மலேசிய ஊடகம் தெரிவித்தது.
அப்துல் ஹஃபிசின் 34 வயது மனைவியும் அவரது 7 வயது மகளும் திடீரென்று சாலையைக் கடந்ததால் அப்பெண் ஓட்டுநரால் தமது காரை நேரத்தோடு நிறுத்த முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
கார் இருவர் மீதும் மோதியதில் அவர்களுக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டன.
இதையடுத்து, அப்பெண் ஓட்டுநரை அப்துல் ஹஃபிஸ் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.