சமைக்கும்போது பெண் ஒருவர் கைதவறி கைப்பேசியைச் சூடான பாத்திரத்திற்குள் போட்ட காணொளி இணையத்தில் பரவலாகி வருகிறது.
பின்னர் இடுக்கியைக் கொண்டு அந்தக் கைப்பேசியை அவர் எடுத்துவிட்டார்.
அக்காணொளியில், உணவகம் ஒன்றின் சமையலறையில் அவர் சமையல் செய்துகொண்டிருப்பது தெரிகிறது. அப்போது அவர் தமது காற்சட்டைப்பைக்குள் இருந்து கைப்பேசியை எடுக்கும்போது, கைதவறி, அது அடுப்பிலிருந்த பாத்திரத்தில் விழுந்து விடுகிறது. சூடான எண்ணெய்க்குள் கைப்பேசி விழுந்ததை அடுத்து, இடுக்கியைப் பயன்படுத்தி அவர் அதனை மீட்கிறார்.
கைப்பேசியை எடுத்துவிட்டதால் அவர் மகிழ்ச்சியும் அதே நேரத்தில் அதிர்ச்சியும் அடைந்ததை அவரது முகக்குறிப்பு காட்டுகிறது.
ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் இந்தக் காணொளியைக் கண்டுள்ள நிலையில், சிலர் வேடிக்கையான கருத்துகளையும் பதிவிட்டுள்ளனர்.
மேலும், வெப்பத்தால் அந்தக் கைப்பேசி வெடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்றும் சிலர் தங்களது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.


