மக்கஸ்ஸார்: ஒரு பெண்ணை மலைப்பாம்பு ஒன்று முழுமையாக விழுங்கியதை அடுத்து, அந்தப் பெண்ணின் சடலம் பாம்பின் வயிற்றில் கண்டுபிடிக்கப்பட்டதாக இந்தோனீசியக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒரே மாதத்தில் மத்திய இந்தோனீசியாவின் சுலாவேசி மாகாணத்தில் மலைப்பாம்பால் நேர்ந்த இரண்டாவது உயிரிழப்புச் சம்பவம் இது.
உடல்நலமில்லாத தம்முடைய பிள்ளைக்காக ஜூலை 2ஆம் தேதி காலையில் மருந்து வாங்கச் சென்ற 36 வயது திருவாட்டி சிரியாத்தி, காணாமல் போனதை அடுத்து உறவினர்கள் அவரைத் தேடும் பணியில் இறங்கினர்.
திருவாட்டி சிரியாத்தியின் கணவர் திரு அடியான்சா, 30, காணாமல் போன தம் மனைவியின் செருப்புகளையும் கால்சட்டையையும் அவர்களின் வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் கண்டெடுத்தார்.
பின்னர், அருகே ஒரு மலைப்பாம்பை அவர் பார்த்தார். அப்போது அந்தப் பாம்பு உயிருடன் இருந்ததாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்தது.
மலைப்பாம்பின் வழக்கத்திற்கு மாறான பெரிய வயிற்றைக் கண்டதும் திரு அடியான்சாவுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.
கிராம மக்களை அவர் உதவிக்கு அழைத்ததை அடுத்து, அனைவரும் திருவாட்டி சிரியாத்தியின் உடலை மலைப்பாம்பின் வயிற்றைக் கிழித்துக் கண்டுபிடித்தனர்.
இத்தகைய சம்பவங்கள் அரிது என்றாலும் அண்மைய ஆண்டுகளாக பலரும் மலைப்பாம்புகளால் விழுங்கப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
ஜூன் மாதம் தென் சுலாவேசியின் மற்றொரு மாவட்டத்தில் மலைப்பாம்பின் வயிற்றில் பெண் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.