எதிர்பார்த்ததைவிட கூடுதல் கட்டணத்தை எதிர்நோக்குவது பயனீட்டாளர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய ஒரு விஷயம்.
£16,000 (S$25,800) தண்ணீர் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை அறிந்த மாது ஒருவர் அதிர்ச்சியடைந்தார். வேல்ஸ் நாட்டில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
நீண்ட நாள்களாக கண்டறியப்படாமல் இருந்த தண்ணீர்க் கசிவு காரணமாக கட்டணம் எகிறியது.
கிளேர் ஃபிட்ஸ்பேட்ரிக் எனும் அந்த மாது, கடந்த ஆண்டுதான் புது வீட்டிற்குள் குடியேறினார்.
"என் வீட்டின் பின்புறம் நான் ஏதோ தண்ணீர்ப் பூங்கா நடத்துவதைப்போல அதிகாரிகள் நினைத்திருக்க வேண்டும்," என்றார் கிளேர்.
அவருடைய வீட்டிற்கு வந்த பொறியாளர் ஒருவர், வீட்டைப் பரிசோதித்த பிறகு எங்கேயோ தண்ணீர்க் கசிவு இருப்பதுபோல தெரிவதாகச் சொன்னார். ஆனால், தண்ணீர்க் கசிவு ஏற்பட்ட இடத்தை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. வாகனம் செல்லும் பாதை தோண்டி எடுக்கப்பட வேண்டியிருக்கலாம் என கிளேருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
உண்மையைச் சொல்லப்போனால், இது பிரச்சினையின் ஆரம்பம் மட்டுமே. கடந்த ஆகஸ்ட்டில் விடுமுறை முடிந்து வீடு திரும்பியபோது அவருக்கு மற்றோர் அதிர்ச்சி காத்திருந்தது.
அவருடைய வீட்டிற்கு வெளியே பெரியதொரு குழி தோண்டப்பட்டிருந்தது. இருந்தபோதிலும், தண்ணீர் நிறுவனத்தால் தண்ணீர்க் கசிவைக் கண்டறிய முடியவில்லை.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, கிளேருக்கு தண்ணீர் கட்டணம் £15,833.11ஆக (S$25,530) எகிறியது.
தண்ணீர் நிறுவனத்தால் தண்ணீர் கசிவைக் கண்டறிய முடியாமல் போனால், அதைக் கண்டறிய தனியார் ஒப்பந்ததாரரை ஈடுபடுத்துவதற்கான செலவை கிளேர்தான் ஏற்க வேண்டும் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்வரை கிளேருடைய தண்ணீர் கணக்கு முடக்கப்பட்டது. கட்டணம் செலுத்துவதற்கான திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், கிட்டத்தட்ட £16,000ஐ செலுத்துவது தமக்கு கட்டுப்படியான ஒன்றாக இருக்காது என்று கிளேர் குறிப்பிட்டார்.
நல்லெண்ண அடிப்படையில் கிளேருக்கு தங்களால் ஆன உதவியை வழங்கவிருப்பதாகக் கூறிய தண்ணீர் நிறுவனம், இருந்தபோதிலும் தண்னீர்க் கசிவுக்கு அவர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றது.