நியூயார்க்: 2024ஆம் ஆண்டில் உலகெங்கிலும் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒரு பெண் தனக்கு நெருக்கமான உறவுகளால் கொல்லப்படுகிறார் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் (ஐநா) திங்கட்கிழமை (நவம்பர் 24) அறிக்கை வெளியிட்டுள்ளது.
பெண்கள் பாதுகாப்புக்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் போதாது, அதில் தீவிரம் காட்டப்பட வேண்டும் என்று ஐநா கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 50,000 பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள் அவர்களது காதலர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டதாக அறிக்கை குறிப்பிட்டது.
117 நாடுகளிலிருந்து இந்தத் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு 137 பெண்கள் கொலை செய்யப்படுகின்றனர். அதாவது, சராசரியாக ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு பெண் கொல்லப்படுகிறார். அறிக்கையில் உள்ள தரவுகளை ஐநாவின் போதைப்பொருள், குற்ற எதிர்ப்பு அமைப்பும் பெண்கள் அமைப்பும் வெளியிட்டன.
திங்கட்கிழமை பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான அனைத்துலக தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது இந்தத் தரவுகள் வெளியிடப்பட்டன.
அறிக்கையின்படி 60 விழுக்காட்டுப் பெண்கள் தங்களின் கணவர், காதலர், தந்தை, தாய், சகோதரர்கள், மாமன்கள் ஆகியோரால் கொலை செய்யப்பட்டனர். அதேபோல், இதே காலகட்டத்தில் 11 விழுக்காட்டு ஆண்கள் தங்களுக்கு நெருக்கமான உறவுகளால் கொலை செய்யப்பட்டனர்.
2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான கொலைகள் சற்று குறைந்துள்ளன. ஆனால் சில நாடுகளிலிருந்து சரியான தரவுகளை அதிகாரிகளால் சேகரிக்க முடியவில்லை. அதனால் கொலை எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
“ஒவ்வோர் ஆண்டும் பல ஆயிரம் பெண்கள் கொலை செய்யப்படுகின்றனர். நிலைமை சரியாகவில்லை. வீட்டில்தான் பெண்கள், சிறுமிகளுக்குப் பலமுறை கொலை அச்சுறுத்தல் ஏற்படுகிறது,” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பெண்களுக்கு எதிரான கொலை பதிவாகியுள்ளது. ஆப்பிரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 22,000 கொலைகள் பதிவாகியுள்ளன.

