பாகாங்: மலேசியாவில் காப்புறுதித் தொகையைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் தமது மனைவியிடம் கொள்ளையடிக்க திட்டமிட்ட ஆடவர் ஒருவர் திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டார்.
இதற்கு முன்னர் சம்பவத்தின் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மூன்று சந்தேகப் பேர்வழிகள் விசாரிக்கப்பட்ட பிறகு, அந்த 47 வயது கணவரின் திட்டங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
முகமூடி அணிந்து, வாள் ஏந்திய மூன்று பேர் பாகாங் மாநிலத்தின் பெந்தோங் நகரில் உள்ள அந்தத் தம்பதியின் வீட்டில் இருந்த 42 வயதான மாதை மிரட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது அந்த மாது வீட்டில் தனியாக இருந்தார். அந்த மூன்று ஆடவர்களும் 16,000 ரிங்கிட் (S$4,700) மதிப்பிலான அந்த மாதின் நகையைக் கொள்ளையடித்து அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
சம்பவம் நடந்த ஆறு மணி நேரத்திற்குப் பிறகு, காவல்துறையினர் மூவரையும் கைதுசெய்தனர். அவர்களில் இருவர் மலேசியர்கள். ஒருவர் வெளிநாட்டவர். கொள்ளைச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டது. கணவர் உட்பட நான்கு ஆடவர்களும் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், பிரம்படிகளும் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.