கனடா பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்திய பெண்; பத்துப் பேர் மரணம்

கனடா பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்திய பெண்; பத்துப் பேர் மரணம்

படம்: ஏஎஃப்பி

11 Feb 2026 - 4:45 pm

2 mins read

ஒட்டாவா: கனடாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஓர் உயர்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 10) நடந்த துப்பாக்கிச்சூட்டில் பத்துப் பேர் மாண்டனர்.

உயிரிழந்தவர்களில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரும் அடங்குவார்.

கனடாவில் அண்மைக் காலத்தில் நிகழ்ந்த ஆக மோசமான துப்பாக்கிச்சூட்டில் இதுவும் ஒன்று.

பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலம், டம்ளர் ரிட்ஜ் எனும் நகரிலுள்ள அந்த உயர்நிலைப் பள்ளிக்குள் அறுவர் மாண்டுகிடந்தனர். அச்சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் குடியிருப்பில் இருவர் இறந்துகிடந்தனர். ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது வழியிலேயே உயிரிழந்தார் என்று கனடியக் காவல்துறை தெரிவித்தது.

குறைந்தது இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். காயங்களுக்காகச் சிகிச்சை பெற்றுவரும் மேலும் 25 பேரின் உயிருக்கு ஆபத்தில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

துப்பாக்கிச்சூடு நடத்தியதாக நம்பப்படுபவரும் மாண்டுகிடந்தார். அவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதுபோல் தெரிகிறது என்று காவல்துறை தெரிவித்தது.

இச்சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பிருப்பதாகக் கருதவில்லை என்றும் காவல்துறை கூறியது.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர் ஒரு பெண் என்பதைத் தவிர, அவர் குறித்த வேறு தகவல்கள் வெளியிடப்படவில்லை. வட அமெரிக்காவில் பெரும்பாலும் ஆண்களே இதுபோன்று கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடுகளை மேற்கொண்டுள்ள நிலையில், இம்முறை ஒரு பெண் அவ்வாறு செய்தது அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

பள்ளியில் இறந்து கிடந்த சந்தேகப் பேர்வழியே துப்பாக்கிச்சூடு நடத்தியவர் என்பதைக் காவல்துறைக் கண்காணிப்பாளர் கென் ஃபிளாய்டு உறுதிப்படுத்தினார். மாண்டவர்களில் எத்தனை பேர் சிறார் என்பதைக் காவல்துறை குறிப்பிடவில்லை.

துப்பாக்கிச்சூடு நடந்த டம்ளர் ரிட்ஜ் உயர்நிலைப் பள்ளியில் 12 முதல் 18 வயதிற்குட்பட்ட 160 மாணவர்கள் பயின்றுவந்ததாக அதன் இணையத்தளம் தெரிவிக்கிறது.

இந்நிலையில், இவ்வாரம் முழுவதும் அப்பள்ளி மூடப்படும் என்றும் தேவைப்படுவோர்க்கு ஆலோசனை வழங்கப்படும் என்றும் பள்ளி அலுவலர்கள் கூறினர்.

துப்பாக்கிச்சூட்டை அடுத்து கனடியப் பிரதமர் மார்க் கார்னி தமது ஜெர்மானியப் பயணத்தைத் தள்ளிவைத்துள்ளதாக அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

“டம்ளர் ரிட்ஜ் பள்ளியில் நடந்த கொடூரமான துப்பாக்கிச்சூட்டால் நான் மனமுடைந்து போயிருக்கிறேன். அந்த மோசமான வன்முறைச் சம்பவத்தில் தங்களது அன்பிற்குரியோரை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று பிரதமர் கார்னி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்