பேங்காக்: மியன்மாரில் திங்கட்கிழமை (மார்ச் 31ஆம் தேதி) நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த ஹோட்டல் கட்டடத்திலிருந்து மாது ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
அந்நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை கிட்டத்தட்ட 2,000 பேர் வரை இறந்திருக்கக்கூடும் என்று மதிப்பிடப்படும் நிலையில், இடிபாடுகளிலிருந்து மாது ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது நம்பிக்கை தருவதாக உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதைத் தொடர்ந்து மியன்மார், தாய்லாந்து ஆகிய இரு நாடுகளிலும் மீட்புப் பணி தீவிரமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மண்டலே நகரில் உள்ள கிரேட் வால் ஹோட்டல் இடிபாடுகளில் இருந்து அந்த மாது உயிருடன் மீட்கப்பட்டதாக சீன அரசாங்கம் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் தெரிவித்தது.
மியன்மாரில் வெள்ளிக்கிழமை (மார்ச் 28ஆம் தேதி) ரிக்டர் அளவில் 7.7 எனப் பதிவான நிலநடுக்கம் அந்நாட்டில் பேரிடரையும் அண்டை நாடான தாய்லாந்தில் சேதத்தையும் விளைவித்தது.
இந்நிலையில், தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் நிலநடுக்கத்தால் சரிந்த உயர்மாடிக் கட்டடத்தில் இருந்த 76 பேரைத் தேடும் பணியை மீட்புப் பணியினர் முடுக்கிவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நோய் பரவும் அபாயம்
மியன்மார் நிலநடுக்கம் அவசரகால நெருக்கடி நிலை என்றும் அங்கு உயிர்களைக் காப்பாற்றவும் அடுத்த 30 நாள்களில் நோய்ப் பரவல் இல்லாமல் பாதுகாக்கவும் உடனடியாக எட்டு மில்லியன் டாலர் தேவைப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
நிலநடுக்கத்தில் உயிரிழப்பும் அதிர்ச்சி தரும் வகையில் காயமடைந்தோரின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. அத்துடன், அந்நாட்டில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் வசதியும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நிலையில் இல்லாமல் இருப்பதால், நோய்ப் பரவல் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக அது தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
காயமடைந்தவர்களுக்கு உடனடி கவனிப்பு தேவை என்றும் அது கூறியது. மேலும், மின்சார இணைப்பு துண்டிப்பு, குடிநீர் விநியோக பாதிப்பு போன்றவை சுகாதாரச் சேவையைப் பாதித்துள்ளதாகவும் அதனால் நீர் சார்ந்த, உணவு சார்ந்த நோய்ப் பரவல் அதிகரிக்கும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அது எச்சரித்துள்ளது.