மலாக்கா: வீட்டிலிருந்த சாய்விருக்கையைக் கறைப்படுத்தியதற்காகக் காதலியின் மூன்று வயது மகனைக் காதலன் அடித்து உதைத்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
சிறுவனின் 24 வயது தாயும் அவரது 31 வயது காதலனும் வெள்ளிக்கிழமை (ஜூலை 7) விசாரணைக்காகக் காவலில் வைக்கப்பட்டதாக மலாக்கா தெங்கா காவல்துறையின் உதவி ஆணையர் கிறிஸ்டஃபர் படிட் தெரிவித்தார்.
இருவரையும் ஒரு வாரம் காவலில் வைத்திருக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறுவனின் தாய், வியாழக்கிழமை காலை 5.30 மணிக்குத் தன் மகனைக் காதலனின் வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தார்.
“சிறுவனுக்கு உடல்நலமில்லை. கைதான ஆடவர் அவனை மருந்தகத்திற்கு அழைத்துச் செல்வதாக இருந்தது,” என்று உதவி ஆணையர் படிட் தெரிவித்தார்.
ஆனால், கிட்டத்தட்ட 40 நிமிடங்களுக்குப் பிறகு சிறுவன் கீழே விழுந்து சுயநினைவை இழந்துவிட்டதாக அவனது தாயிடம் காதலன் தெரியப்படுத்தினான். இருவரும் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். காலை 9.15 மணிக்கு சிறுவன் உயிரிழந்தான். தலையிலும் உடலிலும் அடித்து உதைத்த காயங்களே இறப்புக்குக் காரணம் என உடற்கூறாய்வு காட்டியது.
தனக்கு விருப்பமான சாய்விருக்கையில் சிறுவன் வாந்தி எடுத்ததால் அவனை அடித்ததைக் காதலன் ஒப்புக்கொண்டதாக உதவி ஆணையர் படிட் கூறினார்.

