தென்கொரியாவில் துணிகளைக் கோத்து 18 மணிநேரம் உதவி நாடிய மாது

1 mins read
5b2f89cc-7a74-4391-9b87-44d91d991ec7
துணிமணிகளைக் கோத்துத் தொங்கவிட்டு மாது உதவி நாடினார். - படம்: தி கொரியா ஹெரால்ட் / சோல் ஜோங்னோ காவல் நிலையம்

சோல்: தென்கொரியாவில் அடுக்குமாடி வீடு ஒன்றின் மாடத்தில் கிட்டத்தட்ட இரண்டு நாள்களாகச் சிக்கிக்கொண்ட மாது ஒருவர் சுற்றுக்காவலில் ஈடுபட்ட அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க பல துணிகளைக் கோத்துத் தொங்கவிட்டிருக்கிறார்.

தலைநகர் சோலில் உள்ள டோங்னிமுன் ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள அடுக்குமாடி வீட்டிலிருந்து 70 வயதைத் தாண்டிய மாது ஒருவரை இம்மாதம் 10ஆம் தேதி காலை 10 மணியளவில் மீட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட மாது செடிகளுக்கு நீரூற்ற தனது வீட்டு மாடத்துக்குச் சென்றிருக்கிறார். அப்போது அவர் பின்னால் இருந்த கதவு தானாகவே மூடி பூட்டிக்கொண்டது.

அதனால், அந்த மாது 18 மணிநேரம் மாடத்தில் சிக்கிக்கொண்டார்.

அவரின் வீடு, கட்டடத்தின் உயர் தளத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் தனியாக வாழ்ந்துவருவதால் அவர் பால்கனியில் சிக்கிக்கொண்டது யாருக்கும் தெரியவில்லை.

பிறகு அவர் பால்கனியில் இருந்த துணிமணிகளை ஒன்றாகக் கோத்து சாலையை நோக்கித் தொங்கவிட்டு உதவிக்குக் காத்திருந்தார்.

சோலின் ஜோங்னோ காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இருவர் அதனைக் கண்டனர். உடனடியாக மேலும் சில அதிகாரிகளை வரவழைத்து மூதாட்டியை மீட்டனர்.

குறிப்புச் சொற்கள்