திரெங்கானு: துணி வெளுப்பதற்காக சுயசேவை சலவையகத்திற்குப் போன பெண் ஆயுதத்தால் தாக்கப்பட்ட சம்பவம் மலேசியாவின் திரெங்கானு மாநிலத்தில் நிகழ்ந்தது.
கண்காணிப்புப் படக்கருவியில் பதிவான இச்சம்பவம் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வலம் வருகிறது.
அதில், ஆடவர் ஒருவர் பின்னாலிருந்து அந்த 31 வயதுப் பெண்ணை ஆயுதத்தால் குத்துவது தெரிகிறது.
பின்னர் அவரைக் கீழே தள்ளிவிட்டு, உதைத்தபின் அந்த ஆடவர் அங்கிருந்து வெளியேறுவதும் தெரிகிறது.
பாதிக்கப்பட்ட பெண் தனது மைத்துனி என்றும் தாக்கியபின் அவரது உடைமைகளை அந்த ஆடவர் பறித்துச்சென்றுவிட்டார் என்றும் காணொளியைப் பகிர்ந்திருந்த மிஸ்ராவதி மஸ்ரி தெரிவித்துள்ளார்.
அவர் கத்தரிக்கோலால் குத்தப்பட்டதாக நம்பப்படுகிறது என்று காவல்துறை குறிப்பிட்டது.
தாக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்பெண்ணைத் தாக்கிய ஆடவரைக் காவல்துறை தேடி வருகிறது என்றும் அவர் புரோட்டான் வைரா காரில் ஏறித் தப்பிவிட்டார் என்றும் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

