'அஜும்மா' என்று அழைத்ததால் ரயில் பயணிகளைக் கத்தியால் குத்திய மாது

'அஜும்மா' என்று அழைத்ததால் ரயில் பயணிகளைக் கத்தியால் குத்திய மாது

1 mins read
264b18a8-0ada-4e86-ae01-953474eb5369
தென்கொரியாவின் ஜியோஞ்சி மாநிலம், யோங்கின் நகரில் சென்றுகொண்டிருந்த ரயிலில் இச்சம்பவம் நிகழ்ந்தது. படம்: ஏஎஃப்பி -

ரயிலில் பயணிகள் மூவரைக் கத்தியால் குத்தியதாக 37 வயது மாது ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தம்மை 'அஜும்மா' என்று ஒருவர் அழைத்ததால் தாம் தாக்குதலில் ஈடுபட்டதாக அந்த மாது கூறியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தென்கொரியாவின் ஜியோஞ்சி மாநிலம், யோங்கின் நகரில் சென்றுகொண்டிருந்த ரயிலில் இச்சம்பவம் நிகழ்ந்தது. 60களில் உள்ள மாதர்கள் இருவரையும் 50களில் உள்ள ஆடவர் ஒருவரையும் காயப்படுத்தியதாக அடையாளம் குறிப்பிடப்படாத அந்த மாது மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

நடுத்தர வயது மாது ஒருவரைக் குறிப்பிட 'அஜும்மா' என்று தென்கொரியாவில் சிலர் அழைக்கின்றனர். ஆனால், தங்களை அவ்வாறு கூப்பிடுவதைப் பெண்கள் சிலர் தவறாக எடுத்துக்கொள்வதும் உண்டு.

சம்பந்தப்பட்ட அந்த மாது, கைப்பேசியில் உரக்கப் பேசிக்கொண்டிருந்தார். ரயிலில் இருந்த மற்றொரு மாது, அவரை 'அஜும்மா' என்று அழைத்து மெதுவாகப் பேச சொன்னார். இது, தம்மை அவமதித்ததாக அந்த மாது கூறினார்.

இந்நிலையில், கத்திக்குத்துத் தாக்குதலுக்கு ஆளானவர்களில் ஒருவருக்கு அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. ஆனால், எவருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.