தைப்பே: மாது ஒருவர் தன்னுடைய 92 வயது தந்தையின் இறந்த உடலை ஒரு நெகிழிப் பையில் ஏழு மாதங்களாக வைத்திருந்த சம்பவம் தைவானின் கௌஷியோங் நகரில் நடந்துள்ளது.
மாதினுடைய அக்கா வட்டார மேயருடன் பெரியவர் இருந்த வீட்டுக்குக் கடந்த ஜூன் மாதம் சென்றபோது இந்த உண்மை தெரியவந்தது.
இறந்தவர் ஓய்வுபெற்ற ஒரு காவல்துறை அதிகாரி என்று கூறப்படுகிறது.
உயிரிழந்த பெரியவர், தம்முடைய இரண்டாவது மகளுடன் வசித்துவந்ததாகவும் அந்த மகளே அவரின் பிரதான பராமரிப்பாளராக இருந்தார் என்றும் ‘ஈடி டுடே’ செய்தி அறிக்கை ஒன்று குறிப்பிட்டுள்ளது.
பெரியவர் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் உடல்நலக் குறைவால் மருத்துவரிடம் சென்றார்.
அதையடுத்து, பெரியவரை அவரின் மகள் வீட்டுக்குக் கொண்டு வந்துவிட்டார் என்றும் அதன் பின்னர் அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அண்டைவீட்டாரும் உறவினர்களும் சந்தேகத்தின் பேரில் பெரியவரைப் பற்றிக் கேள்வி கேட்டபோதெல்லாம் அவர் நலமாக இருக்கிறார் என்றே அந்த மகள் கூறி வந்துள்ளார்.
தொலைபேசி அழைப்புகளை அவர் கண்டுகொள்ளவில்லை. அத்துடன் வீட்டுக் கதவையும் திறக்க அவர் தயங்கினார்.
தொடர்புடைய செய்திகள்
வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதையும் அண்டைவீட்டார் கவனித்தனர்.
இந்நிலையில், மாதின் அக்கா உள்ளூர் மேயருடனும் காவல்துறையினருடனும் வீட்டுக்குச் சென்றார்.
கொல்லனின் உதவியோடு, வீட்டுக் கதவைத் திறந்தனர். அங்கு கறுப்பு பிளாஸ்டிக் பையில் பெரியவரின் எலும்புகள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டன.
தந்தையின் உடலை மகள் ஏன் புதைக்கவில்லை என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, ஏழு மாதங்களாகப் பெரியவரின் ஓய்வூதியத்தை அந்த மகள் பெற்றுவந்தார் என்றும் அதை மீட்க அதிகாரிகள் முயன்று வருகின்றனர் என்றும் அறியப்படுகிறது.
தந்தையின் மருத்துவச் செலவுகளை மாது கட்டாததால், மருத்துவமனை இறப்புச் சான்றிதழையும் வழங்கவில்லை.