கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் எட்டு மீட்டர் ஆழமான குழிக்குள் மாது ஒருவர் விழுந்துவிட்டார்.
அவரை மீட்கும் பணிகள் தற்போது நடந்துகொண்டிருக்கின்றன. வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 23) மலேயன் மேன்ஷன் எனும் அடுக்குமாடி வீட்டுக் கட்டடம் இருக்கும் பகுதிக்கு அருகே உள்ள ஜாலான் மஸ்ஜித் இந்தியா வட்டாரத்தில் உள்ள நடைபாதையில் திடீரென ஏற்பட்ட குழியில் அந்த மாது விழுந்ததாகத் தெரிகிறது.
அவ்வழியே நடந்துசென்ற இந்தியாவைச் சேர்ந்த மாது குழிக்குள் விழுந்தார்.
காலை 8.20 மணியளவில் இச்சம்பவம் குறித்து கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புப் பிரிவுக்குத் தகவல் கிடைத்தது. இரண்டு தீயணைப்பு நிலையங்களிலிருந்து கிட்டத்தட்ட 15 தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டனர்.
சம்பவ இடத்துக்குச் சென்றதும் மாது ஒருவர் குழிக்குள் விழுந்ததைத் தெரிந்துகொண்டதாக செயற்திட்டத் தளபதி முகம்மது ரிடுவான் அக்பர் கூறினார். தேடல், மீட்புப் பணிகள் நடந்துகொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வெள்ளிக்கிழமை இரவு 9 மணி வரை, குழியிலிருந்து அந்த மாது மீட்கப்படவில்லை என்று மலேசிய ஊடகம் தெரிவித்தது.
இந்நிலையில், கோலாலம்பூரின் வாய்க்கால், கழிவுநீர் கட்டமைப்பு முழுமையாக சோதிக்கப்பட்டு அதில் எவ்விதப் பிரச்சினையும் இல்லாதவாறு உறுதி செய்யப்பட வேண்டும் என்று புக்கிட் பிந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபோங் குவி லன் கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திரு ஃபோங், அந்தப் பகுதி பயணிகளிடையே பிரபலமான ஒன்று என்பதால், இதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
“இந்தச் சம்பவம் தொடர்பாக மட்டுமல்ல, வருங்காலத்தைக் கருத்தில் கொண்டும், கோலாலம்பூர் நகர மண்டபம் வடிகால்களில் கசிவு இருக்கிறதா என்பதை சோதித்துப் பார்க்க வேண்டும்,” என்று கூறினார்.
அவற்றில் ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் அவை உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.