கேன்பரா: தாம் புதிதாகச் சேர்ந்த வேலையிலிருந்து பத்தே நிமிடங்களில் ஓடிய பெண் ஒருவரிடம், எதனால் அந்நிலை நேர்ந்தது என்று பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பினர்.
“கதறி அழுதுகொண்டிருந்த குழந்தைகளுடன் ஒரே அறையில் இருந்தேன். முடியாமல் கிளம்பிவிட்டேன்,” என்றார் சோஃபியா வார்ட் என்ற அந்தப் பெண்.
பிரிட்டனைச் சேர்ந்த அவர், ஆஸ்திரேலியாவில் தாம் மேற்கொண்டு வரும் வேலைத் தேடல் பயணத்தை விடாமல் இணையவாசிகளுக்காக பதிவு செய்துவருகிறார்.
அவ்வாறு சமீபத்தில் அந்த 32 வயது பெண் கால்வைத்தது, குழந்தைப் பராமரிப்புத் துறையில்.
இருப்பினும், வேலையைத் தொடங்கி 10 நிமிடங்களே ஆன நிலையில் திரும்பிப் பார்க்காமல் ஓடிவிட்டார் சோஃபியா.
ஆஸ்திரேலியாவில் சரியான வேலை அமையாமல் திண்டாடிக்கொண்டிருந்த வேளையில், இந்தக் குழந்தைப் பராமரிப்பு வேலையைச் செய்து பார்க்க அவர் துணிந்தார்.
“இணையத்திலும் நேரடியாகவும் நான் நூற்றுக்கணக்கான வேலைகளுக்கு விண்ணப்பித்து விட்டேன். சமூக ஊடகங்களைக்கூட பயன்படுத்தினேன்,” என்றார் அவர்.
தமக்கு வாடிக்கையாளர் சேவை தொடர்பாக பழுத்த அனுபவம் இருந்தும் வேலை கிடைக்கச் சிரமமாக இருந்ததாக அவர் தெரிவித்தார். இதற்கிடையே, பிரிஸ்பேனுக்குச் சென்றால் வாய்ப்பு கிடைக்கும் என்று இணையவாசி ஒருவர் சோஃபியாவுக்கு ஆலோசனை கூறினார்.

