1970களில் ஆசியாவில் பல கொலைகளைச் செய்திருந்த தொடர் கொலையாளி சார்ல்ஸ் சோப்ராஜ், அண்மையில் நேப்பாள சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்டார்.
நேப்பாளத்திலிருந்து கத்தார் தலைநகர் தோஹாவுகு கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் அவர் பயணம் செய்தார். அங்கிருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு அவர் செல்லவிருந்தார்.
இந்நிலையில், விமானத்தில் சோப்ராஜுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த மாதின் படம் சமூக ஊடகங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
இருபது பேருக்கு மேற்பட்டோரைக் கொன்ற தொடர் கொலையாளிக்கு பக்கத்திலா அமர்ந்திருக்கிறோம் என்ற அதிர்ச்சி அந்த மாதின் முகத்தில் தென்பட்டதாகத் தெரிகிறது.
அந்த மாதின் எதிர்வினையைத் தங்களால் புரிந்துகொள்ள முடிவதாக இணையவாசிகள் பலரும் கருத்துரைத்துள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த தந்தைக்கும் வியட்னாமிய தாய்க்கும் பிறந்த சோப்ராஜ், கொள்ளையனாக மாறி, பல நாடுகளுக்கும் பயணம் செய்தார். தனது கொலைகளை அவர் தாய்லாந்தில் தொடங்கினார்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகால சிறைவாசத்திற்குப் பின்னர் அவரை விடுதலை செய்ய கடந்த புதன்கிழமை நேப்பாள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
வயது முதிர்ச்சியைக் காரணம் காட்டி அது விடுதலை செய்தது.

