டாக்கா: பங்ளாதேஷில் நடைபெறவுள்ள தேர்தலில் பங்கெடுக்க வேண்டும் எனக் கோரிப் பெண்கள் திங்கட்கிழமை (பிப்ரவரி 9) பேரணி நடத்தியிருக்கின்றனர். தேர்தலில் தங்களுக்கு நீதியும் அரசியல் பிரதிநிதித்துவமும் கிடைக்க வேண்டும் என அவர்கள் அழைப்பு விடுத்தனர்.
2024ஆம் ஆண்டு நாட்டில் அப்போதைய அரசாங்கத்திற்கு எதிரான எழுச்சியில் பெண்களும் உதவியிருந்தனர். ஆயினும் எதிர்வரும் தேர்தலில் அவர்கள் பங்கெடுக்கும் விகிதம் மிகவும் குறைவே என்று கூறப்பட்டது.
வேட்பாளர்களில் பெண்களின் விகிதம் நான்கு விழுக்காட்டுக்கும் குறைவு. கிட்டத்தட்ட 30 கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் அனைவருமே ஆண்கள்.
“எந்த ஆட்சி அமைக்கப்பட்டாலும் பெண்களை அடக்கிஒடுக்கிப் புறக்கணிப்பது பல்வேறு வடிவங்களில் இடம்பெறுகிறது,” என்று பேரணியில் ஆர்ப்பாட்டம் செய்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரியா அஹ்சான் சௌத்ரி தெரிவித்தார். நாடாளுமன்றத்திற்கு வெளியே பாட்டுப் பாடி, முழக்கமிட்ட ஏறக்குறைய 100 பெண்களில் அவரும் ஒருவர்.
“சில இடங்களில், பெண்களின் பிரதிநிதித்துவமே இல்லை. அனைவருமே ஆண்கள். அதனால்தான் வெளியில் வந்து குரல் கொடுக்கிறோம்,” என்றார் அவர்.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுவாக்கில் தொடங்கிய பேரணி திங்கட்கிழமை அதிகாலையில் முடிவுற்றது. பெண்கள் பதாகைகளை ஏந்தி, தங்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரைக் கேட்டுக்கொண்டனர்.
“நீதி, சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டைக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பேரெழுச்சி உருவானது. ஆனால் இப்போது பொதுவெளியிலிருந்து பெண்கள் மெதுவாக ஒதுக்கப்படுகிறார்கள்,” என்று தொழில்நுட்ப ஆய்வு அமைப்பொன்றின் தலைவரான 38 வயது ஷபனாஸ் ரஷிட் தியா கூறினார்.
திருவாட்டி ஷேக் ஹசினா, காலஞ்சென்ற அவரின் பரம வைரியான திருவாட்டி கலீடா ஸியா உட்பட சக்திவாய்ந்த பெண்கள் பங்ளாதேஷை ஆண்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
பங்ளாதேஷின் ஆகப் பெரிய இஸ்லாமியக் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி, எந்தப் பெண் வேட்பாளரையும் தேர்தலில் நிறுத்தவில்லை. அரசியலில் பெண்களை ஏற்றுக்கொள்ளும் அளவுக்குச் சமுதாயம் இன்னும் தயாராகவில்லை என்று கட்சி உறுப்பினர்கள் சிலர் கூறினர்.

