பெட்டாலிங் ஜெயா: வேலை அனுமதி விண்ணப்ப வழிகாட்டுதல்கள் மற்றும் செயலாக்க காலக்கெடுவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து, குறிப்பாக உலகளாவிய வணிகச் சேவைகள் துறையைச் சேர்ந்தவர்கள் அக்கறை தெரிவித்ததைக் கவனத்தில் கொண்டுள்ளதாக மலேசியாவின் மின்னிலக்க அமைச்சு தெரிவித்துள்ளது.
மலேசியாவின் மின்னிலக்கப் பொருளியலின் முக்கியத் தூணாக உலகளாவிய வணிகச் சேவைகள் துறை தொடர்ந்து விளங்கி வருவதாகவும் இது முதலீட்டு வரவு, உயர்மதிப்பு வேலை வாய்ப்புகள் உருவாக்கம் மற்றும் வட்டார மின்னிலக்க மையமாக நாட்டின் நிலையை உறுதிப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
“எனவே, எழுப்பப்பட்டுள்ள விவகாரங்களை அமைச்சு அதிக தீவிரத்துடன் அணுகுகிறது,” என்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) வெளியிட்ட அறிக்கையில் அமைச்சு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய அமைப்புகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளுடன் இணைந்து, இந்த விவகாரங்கள் குறித்து தற்போது விரிவான மறுஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சு பங்குதாரர்களுக்கு உறுதியளித்துள்ளது.
சவால்களைத் துல்லியமாகப் புரிந்துகொள்ளவும், உடனடித் தீர்வுகள் மற்றும் நீண்டகால மேம்பாடுகளைக் கண்டறியவும் அமைச்சின்கீழ் உள்ள மலேசிய மின்னிலக்கப் பொருளியல் கழகத்துடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

