வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ள பிரம்மாண்டமான வளைவு அமைக்கும் பணி வாஷிங்டனில் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது.
அமெரிக்க அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை (செப்டம்பர் 3) அதனை அறிவித்தார். இது, தலைநகர் முழுதும் பலத்த எதிர்ப்பை உருவாக்கியுள்ள ஒரு திட்டம் அதிவேகத்தில் முன்னெடுக்கப்படுவதைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
இந்த வெள்ளை வளைவு, தலைநகரில் தமது தனிப்பட்ட முத்திரையைப் பதிப்பதற்குத் திரு டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது. வளைவின் உயரம் 76 மீட்டர். உச்சியில் ஒரு தேவதை மற்றும் கழுகுகளின் பெரிய தங்கச் சிலைகளும் இருக்கும் வகையில் அதன் மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது.
“லிங்கன் நினைவுச் சின்னத்திற்கும், ஆர்லிங்டன் தேசிய இடுகாட்டிற்கும் இடையே உள்ள புல்வெளிப் பகுதியில் அமையவுள்ள ‘மாபெரும் வெற்றி வளைவுக்கான’ நில அகழ்வுப் பணிகளை அடுத்த இரண்டு வாரங்களில் தொடங்க நாங்கள் தயாராகி வருகிறோம்,” என்று உள்துறை அமைச்சர் டக் பர்கம் கூறினார்.
ஆர்லிங்டன் இடுகாட்டின் வரலாற்றையும் முக்கியத்துவத்தையும் கௌரவிக்கும் வகையிலும் உலகின் மிகச் சக்திவாய்ந்த தலைநகருக்குப் பொருத்தமான விதத்திலும் அமெரிக்கக் கட்டடக்கலையின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக இந்த வளைவு அமையப்போகிறது என்று அவர் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பொட்டோமாக் நதியில் உள்ள ஒரு தீவின் புல்வெளியில் வளைவு அமையவிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஏனெனில் அமெரிக்கத் தலைநகரில் இத்தகைய பெரிய மாற்றத்தைச் செய்வதற்கு டிரம்ப் நிர்வாகம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைக் கோரவில்லை.
இதன் பிரம்மாண்ட அளவைக் கருத்தில் கொண்டால், வாஷிங்டனின் சின்னங்களில் ஒன்றான லிங்கன் நினைவுச் சின்னத்திற்கும் ஆயிரக்கணக்கான அமெரிக்க ராணுவ வீரர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஆர்லிங்டன் தேசிய இடுகாட்டிற்கும் இடையிலான காட்சிகளை இது மறைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
2025ஆம் ஆண்டு ஜனவரியில் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, திரு.டிரம்ப் தொடர்ந்து புதுப்பிப்புத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். அவற்றில் பல சட்டபூர்வ சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளன.


