காற்றுக் குழாய் மோதி ஊழியர் மரணம்

காற்றுக் குழாய் மோதி ஊழியர் மரணம்

2 mins read
26aa8ec7-aa96-4d03-b9a2-4d6fff8e2454
எண் 37 ஜூரோங் போர்ட் ரோட்டில் உள்ள கட்டுமானத் தளத்தில் அஸ்திவாரப் பணிகளில் ஈடுபட்ட ஊழியர்மீது காற்றுக் குழாய் மோதியது. - படம்: ஜூரோங் போர்ட்

ஜூரோங் போர்ட் ரோட்டில் உள்ள கட்டுமானத் தளத்தில் நிகழ்ந்த விபத்தில் 35 வயது ஊழியர் ஒருவர் மரணமடைந்தார்.

செப்டம்பர் 11ஆம் தேதி இரவு 8.20 மணியளவில் அஸ்திவாரப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது காற்றழுத்தச் சாதனத்துடன் இணைக்கப்பட்டிருந்த குழாய் அவர்மீது மோதியதாக மனிதவள அமைச்சு ஞாயிற்றுக்கிழமையன்று (செப்டம்பர் 13) தெரிவித்தது.

ஜூரோங் துறைமுகத்தின் தளத்தில் இச்சம்பவம் நடந்துள்ளதாக அத்துறைமுகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் இரவு 8:30 மணியளவில் அப்பகுதியில் நடந்த சம்பவம் குறித்துத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் கூறின.

அந்த ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

முதற்கட்ட விசாரணையில் சந்தேகத்திற்குரிய வகையில் சூது எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை என்று காவல்துறை கூறியது.

கட்டுமானத் தளத்தில் ‘கெல்லர் ஃபவுண்டேஷன்ஸ் ஏசியா’ என்ற நிறுவனம் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வந்தது.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அந்தத் தளத்தில் அனைத்து கான்கிரீட் போடும் பணிகளையும் உடனடியாக நிறுத்துமாறு அந்த நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் மனிதவள அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

குழாய்கள், கருவிகள் அல்லது இணைப்புகளைப் பிரிப்பதற்கு முன், அழுத்தப்பட்ட காற்று அமைப்புகள் முறையாகப் பிரிக்கப்பட்டு முழுமையாக அழுத்தம் நீக்கப்பட வேண்டும் என்று பொதுவான பாதுகாப்பு நடவடிக்கையாக மனிதவள அமைச்சு வலியுறுத்தியது.

இணைப்புகள் பிரிக்கப்படும்போது, அழுத்தத்தால் குழாய்கள், பிற பாகங்கள் எதிர்பாராதவிதமாக நகர்வதைத் தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இந்நிலையில் ஒப்பந்ததாரர், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஒத்துழைப்புகளை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ள ஜூரோங் துறைமுகம், விசாரணைக்காக அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டுவருவதாகக் குறிப்பிட்டது.

“இந்தச் சிரமமான காலத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று துறைமுகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

“எங்கள் தளங்களில் பணிபுரியும் அனைவரின் பாதுகாப்பும் நலனும் ஜூரோங் துறைமுகத்தின் முதன்மை முன்னுரிமையாகும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் ஜூரோங் போர்ட் ரோடு கட்டுமானத் தளத்தில் நிகழ்ந்த மற்றொரு வேலையிட மரணச் சம்பவத்தைத் தொடர்ந்து இச்சம்பவம் நடந்துள்ளது.

ஆகஸ்ட் 3ல் எண் 30 ஜூரோங் போர்ட் ரோட்டில் உள்ள கட்டுமானத் தளத்தில் சாரக்கட்டுச் சரிந்து விழுந்ததில் 23 வயதான பங்களாதேஷ் ஊழியர் உயிரிழந்தார்.

குறிப்புச் சொற்கள்
ஊழியர்விபத்துகட்டுமானத் துறைதுறைமுகம்