பிரசல்ஸ்: பெல்ஜியத்தில் உள்ள கட்டுமானத் தளம் ஒன்றில் ஊழியர்கள் 10 மில்லியன் டாலருக்கும் (12.8 மில்லியன் வெள்ளி) மேல் மதிப்புடையதாக நம்பப்படும் தங்கக் கட்டிகளை இவ்வாரம் கண்டெடுத்தனர்.
அந்தத் தளத்துக்குப் போகவேண்டாம் என்று அந்நாட்டுக் காவல்துறையினர், ‘தங்கவேட்டை’யில் ஈடுபடுவோரைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) தங்கக் கட்டிகள் கண்டெடுக்கப்பட்டன. டெண்டர்மோண்டே நகரில் கட்டடம் ஒன்றுக்கான புதுப்பிப்புப் பணிகளின்போது அச்சம்பவம் நிகழ்ந்தது.
பெரிய அளவில் தங்கத்தைக் கண்டெடுத்ததாகச் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தங்களிடம் தெரியப்படுத்தினர் என்று காவல்துறை கூறியது. கிட்டத்தட்ட 50 தங்கக் கட்டிகள், பல தங்கக் காசுகள் ஆகியவற்றைக் கொண்ட படத்தைக் காவல்துறை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்தது.
அந்தத் தங்கக் கட்டிகள், காசுகள் ஆகியவற்றின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட ஒன்பது மில்லியன் யூரோ (13.3 மில்லியன் வெள்ளி) எனக் கணிக்கப்பட்டுள்ளதாகப் பெல்ஜிய செய்தி நிறுவனம் ஒன்று குறிப்பிட்டது. உள்ளுர் நன்கொடை அமைப்புக்குச் சொந்தமான வீட்டின் புதுப்பிப்புப் பணிகளின்போது அதன் சுவர்களுக்குள் அவை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அது தெரிவித்தது.
கண்டெடுக்கப்பட்ட தங்கம், அதன் சட்டபூர்வ உரிமையாளரிடம் போகும் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாகக் காவல்துறை சொன்னது.


