சிட்னி: ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் தெளிவான பெரும்பான்மையுடன் வாகை சூடியுள்ளார்.
அவரது தொழிலாளர் கட்சி 85 விழுக்காட்டு வாக்குகளைக் கைப்பற்றியதாக ஏபிசி செய்தி நிறுவனம் தெரிவித்தது.
முடிவுகள் வெளிவந்ததை அடுத்து மக்களிடம் பேசிய திரு அல்பனிஸ், “நிச்சயமற்ற உலகச் சூழலில் ஆஸ்திரேலியர்கள் நம்பிக்கையையும் உறுதியையும் தேர்வு செய்துள்ளனர்,” என்றார்.
பிள்ளைப் பராமரிப்பை மலிவாக்குவதுடன் தேசிய உடற்குறையுள்ளோர் காப்புறுதித் திட்டத்தில் உள்ளோருக்குக் கூடுதல் ஆதரவு வழங்கப்படும் என்று திரு அல்பனிஸ் வாக்குறுதியளித்தார்.
புதிய திறனை வளர்க்க விரும்பும் ஊழியர்களுக்கும் கூடுதல் அரசாங்க ஆதரவு கிடைக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பழைமைவாத மிதவாதக் கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தோல்வியை ஒப்புக்கொண்டார். அவர் சொந்த இடத்தையும் தேர்தலில் இழந்தார்.
திரு டட்டன் திரு அல்பனிசுக்கு வாழ்த்துக் கூறியதையும் குறிப்பிட்டார்.
வாழ்க்கைச் செலவினம், நிலைகுலையும் பொதுச் சுகாதாரப் பராமரிப்பு, கட்டுப்படியில்லாத வீடமைப்பு, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பால் ஏற்பட்ட நிச்சயமற்ற சூழல் ஆகியவை வாக்காளர்கள் அதிக அக்கறை செலுத்திய விவகாரங்கள். முன்னாள் பிரதமர் டோனி அபோட் பிரிஸ்பனில் உள்ள மிதவாதக் கட்சியின் பிரசார நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
தொடர்புடைய செய்திகள்
பிரதமராக வந்ததற்கு திரு ஆண்டனி அல்பனிசைப் பாராட்டவேண்டும் என்று சொன்ன திரு அபோட், கூட்டணியின் ஆதரவாளர்கள் மனம் தளரவேண்டாம் என்று கூறினார்.
அல்பனிசின் அரசாங்கம் ஆஸ்திரேலியர்களுக்கு உழைக்கும் என்று எதிர்பார்ப்பதாகத் திரு அபோட் குறிப்பிட்டார். இருப்பினும் அரசாங்கத்தால் சமூகப் பிளவுகள் இன்னும் மோசமாகக்கூடும் என்று அஞ்சுவதாகவும் திரு அபோட் சொன்னார். மிதவாத- தேசியக் கூட்டணி தேர்தலில் கிட்டத்தட்ட 40% வாக்குகளைப் பெற்றது.