கோலா திரெங்கானு: அரசங்கத் துறைத் தலைவர்கள், தங்கள் மாநிலங்களில் நிலவும் புகைமூட்டச் சூழலுக்கு ஏற்ப வீட்டிலும் வேலையிடத்திலும் வேலை செய்யும் கொள்கையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மலேசிய பொதுச் சேவைத் துறை தெரிவித்து உள்ளது.
ஒவ்வோர் அரசு ஊழியரின் பணி இலக்குகள் அல்லது முக்கிய செயல்திறன் குறியீடுகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதிசெய்ய, இருவித வேலை நாள் கட்டமைப்பின்கீழ் பொருத்தமான முறைகளைத் துறைத் தலைவர்கள் பயன்படுத்தலாம் என்று பொதுச் சேவைத் துறை தலைமை இயக்குநர் டாக்டர் வான் அகமத் தஹ்லான் அப்துல் அஜீஸ் தெரிவித்துள்ளார்.
கோலா திரெங்கானுவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
“நாங்கள் ஏற்கனவே இந்த ‘ஹைபிரிட்’ வேலை நாள் அட்டவணையை அமல்படுத்தி உள்ளோம். தற்போதைய புகைமூட்டச் சூழலின் பின்னணியில், இது சூழலுக்கு ஏற்பப் பொருந்தக்கூடிய ஓர் அம்சமாகும்.
“எனவே, இந்த ஏற்பாட்டைப் பயன்படுத்துவது துறைத் தலைவர்களின் கைகளில்தான் உள்ளது.
“நாம் நிச்சயமாக இந்தக் கொள்கையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்,” என்றார் அவர்.
மலேசியாவின் இருவித வேலை நாள் கொள்கைப்படி, தகுதியுள்ள அரசு ஊழியர்கள் மூன்று நாள்கள் அலுவலகத்திலும் இரு நாள்கள் வீட்டிலும் வேலை செய்யலாம்.
