சிட்னி: மிகக் கடுமையான வேலையிடக் குற்றச்செயல்கள் தொடர்பாக ஆஸ்திரேலிய நாடாளுமன்ற ஊழியர்கள் 30 புகார்கள் அளித்துள்ளதாக சிட்னி மார்னிங் ஹெரல்டு நாளிதழ் நவம்பர் 10ஆம் தேதியன்று செய்தி வெளியிட்டது.
கூட்டரசு நாடாளுமன்ற ஊழியர்களுக்கு ரகசிய சேவை வழங்க 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நாடாளுமன்ற வேலையிட ஆதரவுச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
அது தொடங்கி முதல் ஒன்பது மாதங்களில் மொத்தம் 339 புகார்கள் அளிக்கப்பட்டன.
அவற்றில் 30 புகார்கள் மிகக் கடுமையான குற்றச் செயல்களுடன் தொடர்புடையவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் பாலியல் ரீதியிலான தாக்குதல், பின்தொடர்தல், மிரட்டல் ஆகியவை அடங்கும் என்று கூறப்படுகிறது.
இப்புகார்கள் தொடர்பாக காலல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அல்லது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.
தாம் பின்தொடரப்பட்டு, மூர்க்கத்தனமாகக் கையாளப்பட்டு, இன்னொரு செனட்டர் தம்மை முறையற்ற வகையில் தொட்டதாக 2023ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் செனட்டர் ஒருவர் புகார் அளித்திருந்தார்.