எம்எச்370 தேடலை மீண்டும் தொடங்க ஏற்பாடு

2 mins read
02cb335d-eecb-498b-8056-872e51d262b5
2015ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம். ஒடிசாவில் எம்எச்370 விமானம் காணாமற்போனதைச் சித்திரித்து மணலில் ஓவியம் வரைந்த இந்திய ஓவியர். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

கோலாலம்பூர்: காணாமற்போன மலேசிய ஏர்லைன்ஸ் எம்எச்370 பயணிகள் விமானத்தைத் தேடும் பணிகளை மீண்டும் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

சரியாக 11 ஆண்டுகளுக்கு முன்பு காணாமற்போன அவ்விமானத்தைத் தேடும் பணிகளை மீண்டும் தொடங்க தாங்கள் அக்கறை கொண்டுள்ளதாக மலேசிய அரசாங்கம் மறுவுறுதிப்படுத்தி உள்ளது. தேடலை மீண்டும் தொடங்க வகைசெய்யும் புதிய ஒப்பந்தத்தை எட்டுவதற்கான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தில் இருப்பதாக மலாய் மெயில் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தேடல் பணிகளுக்குக் கைகொடுக்க அமெரிக்க தேசிய போக்குவரத்து வாரியம் (NTSB), ஆஸ்திரேலிய போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியம் (ATSB) இரண்டும் பிரதிநிதிகளை நியமித்துள்ளதாக மலேசிய போக்குவரத்து அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

“கிடைத்திருக்கும் நம்பகமான துப்புகளைக் கொண்டு எம்எச்370 கடைசியாக இருந்த இடத்தைக் கண்டுபிடித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குச் சரியான தகவல்களை அளிக்கும் நோக்கில் தேடலைத் தொடரும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இந்தத் தேடல் பணிகளில் பொதுமக்களுக்கு இருக்கும் அக்கறையை அமைச்சு அறிகிறது. மலேசிய அரசாங்கத்தின் நடைமுறைகளுக்கு இணங்க மீண்டும் தேடல் பணிகளைத் தொடங்குவதற்கு வகைசெய்யும் ஒப்பந்தத்தை எட்டும் முயற்சியில் அமைச்சு தீவிரமாக இறங்கியுள்ளது,” என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் தேதி அமைச்சரவை எடுத்த முடிவுக்கேற்ப, இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் புதிதாகத் தேடல் பணிகளை நடத்த பிரிட்டி‌ஷ் நிறுவனமான ‘ஓ‌ஷன் இன்ஃபினிட்டி’ முன்வைத்த பரிந்துரையை மலேசியா ஏற்றுக்கொண்டுள்ளது.

சுமார் 15,000 சதுர அடி பரப்பளவு கொண்ட பகுதியில் தேடல் பணிகள் மேற்கொள்ளப்படும். ‘கண்டுபிடிப்பு இல்லையேல் கட்டணம் இல்லை’ (no find, no fee) என்பதற்கேற்ப தேடல் மேற்கொள்ளப்படும்; அதாவது விமானம் கண்டுபிடிக்கப்பட்டால்தான் கட்டணம் வழங்கப்படும்.

227 பயணிகளையும் 12 ஊழியர்களையும் ஏற்றிச் சென்ற எம்எச்370 விமானம் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் தேதி காணாமற்போனது. கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அவ்விமானம் சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்குச் சென்றுகொண்டிருந்தது.

விமானத் துறை வரலாற்றில் இதுவரை காணப்படாத அளவில் தேடல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் மொத்தமாக 46,000 சதுர மைல்கள் பரப்பளவுகொண்ட பகுதிகளில் தேடல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும், இதுவரை எம்எச்370 விமானத்தின் சில சிதைவுகள் மட்டுமே பல்வேறு கடற்கரைப் பகுதிகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கடற்கரைப் பகுதிகள் ஒவ்வொன்றுக்கும் இடையே பல்லாயிரம் மைல் தூரம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்