பெய்ஜிங்கில் உள்ள நூடல் பார் ஒன்றும் சிட்னியின் புறநகர்ப் பகுதியில் உள்ள பொதுப் பள்ளியும் 2024ன் உலகக் கட்டடக்கலைத் திருவிழாவில் சிறந்த வெற்றியாளர்களில் அடங்கும்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்டின் சிறந்த உலகக் கட்டட விருது, ஆஸ்திரேலியாவின் டார்லிங்டன் பொதுப் பள்ளிக்குச் சென்றது.
2023ல் கட்டி முடிக்கப்பட்ட இந்தப் பள்ளியை வடிவமைக்க பள்ளிச் சமூகத்துடன் சேர்ந்து கல்வி ஆலோசகர்கள் பணியாற்றினர். அனைவரையும் உள்ளடக்கிய கற்றல் சூழலைக் கருத்தில்கொண்டு கட்டடக்கலை நிபுணர்கள் இப்பள்ளியை வடிவமைத்தனர்.
மரினா பே சேண்ட்ஸ் எக்ஸ்போ, மாநாட்டு நிலையத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) இரவு நடந்த விருது நிகழ்ச்சியில் நான்கு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
ஆண்டின் சிறந்த கட்டட உள்ளமைப்பு விருது, சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள பாங் மெய் நூடல் பாருக்குச் சென்றது. 2022ல் கட்டி முடிக்கப்பட்ட இந்த உணவகத்தை பெய்ஜிங்கைச் சேர்ந்த Office AIO எனும் நிறுவனம் வடிவமைத்தது.