கடும் பொருளியல் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உலக வங்கியின் முதலீட்டுப் பிரிவான அனைத்துலக நிதி நிறுவனம் 400 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி வழங்க இருக்கிறது.
அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்ய இலங்கைக்கு உதவி செய்யும் நோக்கில் இலங்கைக்கு இந்த உதவிக்கரம் நீட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் பணம் அனுப்பும் சேவையிலும் ஏற்றுமதியிலும் 30 விழுக்காடு பங்கு வகிக்கும் மூன்று தனியார் வங்கிகளிடம் இந்த நிதி வழங்கப்படும்.
அந்த நிதியைக் கொண்டு அவை இலங்கைக்கு மிகவும் தேவையான மருந்துகள், உணவுப்பொருள்கள், உரம் போன்ற அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டது.
இலங்கையின் பொருளியல் கடந்த ஆண்டு 9.2 விழுக்காடு சுருங்கியது.
இவ்வாண்டு அது மேலும் 4.2 விழுக்காடு குறையும் என்று உலக வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. நிதியுதவியை இலங்கை வரவேற்றுள்ளது.