லண்டன்: சவால்கள் நிறைந்த 2025ஆம் ஆண்டிற்கு விடைகொடுத்துவரும் உலக மக்கள், 2026ஆம் ஆண்டு நன்மைகளை அள்ளித் தரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பசிபிக் பெருங்கடலின் கிறிஸ்துமஸ் தீவுகள், டோங்கா, நியூசிலாந்து உள்ளிட்டவையே புத்தாண்டை வரவேற்ற முதலாவது நாடுகள்.
வழக்கம்போல, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் கண்கவர் வாணவேடிக்கைகளுடன் 2026ஆம் ஆண்டை வரவேற்றது.
துறைமுகத்தின் ஓரமாக அமைந்துள்ள கட்டடங்கள், நீள்படகுகளில் இருந்து ஏறக்குறைய 40,000 வாணங்கள் விண்ணில் பறந்து 7 கிலோமீட்டர் தொலைவிற்கு இரவைப் பகலாக்கின. சிட்னி துறைமுகப் பாலத்திலிருந்து கிளம்பிய வாணங்கள், அருவி போன்ற காட்சியமைப்பைக் கண்முன் நிறுத்தின.
அண்மையில் அந்நகரில், யூத நிகழ்ச்சியின்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, இம்முறை கூடுதல் காவல்துறைப் பாதுகாப்புடன் அங்குப் புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சி இடம்பெற்றது.
துப்பாக்கிச்சூட்டில் மாண்டவர்களுக்கு இரவு 11 மணிக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தென்கொரியத் தலைநகர் சோலில் போசிங்கக் மணி மண்டபத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருக்க, பௌத்த வானவியலில் இடம்பெற்றுள்ள 33 விண்ணகங்களைக் குறிக்கும் வகையில், அங்கிருந்த பிரம்மாண்ட வெண்கல மணி 33 முறை ஒலித்தது.
சீனாவில் பெய்ஜிங் நகருக்கு வெளியே, சீனப் பெருஞ்சுவரின் ஜுயோங் கணவாய்ப் பகுதியில் முரசுகள் அதிர புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் தொடங்கின.
தொடர்புடைய செய்திகள்
‘2026’ என்ற எண்ணும் குதிரைச் சின்னமும் அடங்கிய குல்லாய்களோடும் பதாகைகளோடும் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். பிப்ரவரியில் பிறக்கும் சந்திரப் புத்தாண்டு குதிரை ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாங்காங்கில் நவம்பர் மாதம் நேர்ந்த குடியிருப்பு வளாகத் தீ விபத்தில் 161 பேர் உயிரிழந்ததை அடுத்து, அங்குப் புத்தாண்டு வாண வேடிக்கைகள் ரத்துசெய்யப்பட்டன. மாறாக, ‘புதிய நம்பிக்கைகள், புதிய தொடக்கங்கள்’ எனும் கருப்பொருளுடன் மத்திய வட்டாரத்தில் அமைந்துள்ள கட்டடங்கள்மீது வண்ண ஒளிகள் பாய்ச்சப்பட்டு ஒளிக்காட்சி இடம்பெற்றது.
ஐரோப்பிய நாடான குரோவேஷியாவின் புத்தாண்டுக் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. அங்குள்ள ஃபுஸின நகரில் புத்தாண்டிற்கு முதல்நாள் நண்பகலிலேயே மக்கள் ஒன்றுகூடி, ஷாம்பெய்ன் அருந்தியும் நடனமாடியும் மகிழ்ச்சியில் திளைத்தனர். சிலர் சான்டா தொப்பியுடன், பாயர் ஏரியின் குளிர்ச்சிமிக்க நீரில் துணிச்சலுடன் குதித்தனர்.
மற்ற நாடுகளிலும் புத்தாண்டை வரவேற்கப் பல்வேறு நடவடிக்கைகளும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள டைம்ஸ் சதுக்கத்தில் மக்கள் பேரளவில் திரள்வர் என்பதால், அங்குப் பாதுகாப்புத் தடுப்புகளையும் மேடைகளையும் ஏற்பாட்டாளர்கள் அமைத்தனர்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவிலுள்ள கோப்பாகபானா கடற்கரையில் ‘ரிவெய்லான்’ எனும் பேரிசை நிகழ்ச்சிக்கும் வாணவேடிக்கைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கிட்டத்தட்ட நாலாண்டுகளாகப் போர் நீடித்துவரும் நிலையில், புத்தாண்டில் அமைதி திரும்பும் என ரஷ்ய மக்களும் உக்ரேன் மக்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

