மத்திய கிழக்குப் போர் நிறுத்தத்தின் நிலை குறித்து உலகம் கவலை

மத்திய கிழக்குப் போர் நிறுத்தத்தின் நிலை குறித்து உலகம் கவலை

2 mins read
fa2b1536-f1e7-4a08-8e9b-42b8bc202b1d
ஈரான் கொடியுடன் பண்டார் அப்பாஸ் துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த சரக்குக் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

கெய்ரோ: முற்றுகையை மீறிச் செல்ல முயன்ற ஈரானிய சரக்குக் கப்பலைக் கைப்பற்றியுள்ளதாக அமெரிக்கா கூறியதையடுத்து, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்தம் நீடிக்குமா என்ற கவலை திங்கட்கிழமை (ஏப்ரல் 20) அதிகரித்தது. இதற்குப் பதிலடிக் கொடுக்க ஈரான் சபதம் செய்துள்ளது.

ஈரானின் கொடியுடன் பண்டார் அப்பாஸ் துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த சரக்குக் கப்பல்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அமெரிக்க ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. “அவர்களது கப்பல் எங்கள் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. அதில் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்கிறோம்,” என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தக் கப்பல் சீனாவிலிருந்து பயணம் செய்ததாக ஈரானின் ராணுவம் தெரிவித்துள்ளது. “அமெரிக்க ராணுவத்தின் இந்த ஆயுதமேந்திய கடற்கொள்ளைக்கு ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஆயுதப்படைகள் விரைவில் பதிலடிக் கொடுக்கும் என்று எச்சரிக்கிறோம்,” என ஈரானிய ராணுவம் கூறியதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியான முற்றுகை, அச்சுறுத்தும் பேச்சுகள், வாஷிங்டனின் மாறும் நிலைப்பாடுகள் மற்றும் அதிகப்படியான கோரிக்கைகள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு புதிய அமைதிப் பேச்சுவார்த்தைகளை டெஹ்ரான் நிராகரித்துவிட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தனது நிபந்தனைகளை ஈரான் நிராகரித்தால், ஈரானில் உள்ள ஒவ்வொரு பாலத்தையும் மின் உற்பத்தி நிலையத்தையும் அமெரிக்கா அழிக்கும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முன்னதாக எச்சரித்திருந்தார். இது அண்மைய காலமாகத் தொடரும் இத்தகைய அச்சுறுத்தல்களின் ஒரு பகுதியாகும்.

அமெரிக்கா தனது பொது உள்கட்டமைப்புகளைத் தாக்கினால், அரபு நாடுகளின் மின் நிலையங்கள் மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் தாக்கப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

போர் நிறுத்தம் செவ்வாய்க்கிழமையுடன் (ஏப்ரல் 21) முடிவடைகிறது.

இந்நிலையில், இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கப்போவதில்லை என்று ஈரான் கூறியுள்ளதால், மத்திய கிழக்கில் நீண்டகால அமைதியை உருவாக்குவதற்கான முயற்சிகளும் ஆட்டம் கண்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்