மெக்சிகோ சிட்டி: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை நடத்துவதற்கு நாடு தயாராகிவரும் வேளையில் கல்வியாண்டை முன்னதாகவே முடிக்க மெக்சிகோ அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
ஆனால், இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கல்வி அமைச்சர் மரியோ டெல்காடோ, கல்வியாண்டு நாற்பது நாள்களுக்கு முன்னதாக முடிவடையும் என்று வெள்ளிக்கிழமை (மே 8) அறிவித்தார்.
வெப்ப அலையால் பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அவர் காரணமாக சுட்டிக்காட்டினார்.
“கல்வியாண்டை ஜூன் 5ஆம் தேதியுடன் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். பல மாநிலங்களில் வெப்பம் வாட்டி வருகிறது. அது மட்டுமல்லாமல் உலகக் கிண்ணம் தொடர்பான பிரச்சினைகளும் இருக்கின்றன,” என்று அவர் விளக்கமளித்தார்.
அதே சமயத்தில் அடுத்த ஆண்டு கல்வியாண்டை முன்கூட்டியே தொடங்குவது குறித்து அதிகாரிகள் பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்.
அடுத்த கல்வியாண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி தொடங்குவதாக இருக்கிறது.
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை மெக்சிகோ, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. வரும் ஜூன் 11ஆம் தேதி மெக்சிகோ நகரில் நடக்கும் போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் அந்நாடு மோதுகிறது.
தொடர்புடைய செய்திகள்
திரு டெல்காடோ வியாழக்கிழமை அது குறித்து முதலில் அறிவித்தபோது அது ஒரு உத்தேச திட்டமே என்று அதிபர் கிளாடியா ஷெயின்பாம் குறிப்பிட்டார்.
“திட்டவட்டமான கால அட்டவணை எதுவும் தயாரிக்கப்படவில்லை,” என்று செய்தியாளர் கூட்டத்தில் கூறியிருந்த அவர், மாணவர்கள் வகுப்புகளைத் தவறவிடக் கூடாது என்பதில் முக்கிய கவனம் செலுத்தப்படுவதாகச் சொன்னார்.
அரசாங்கத்தின் முடிவு பெற்றோர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. கோடைக்கால விடுமுறை அதிகரிப்பதால் குழந்தைப் பராமரிப்புக்காக மூன்றாவது மாதத்திற்கும் பணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று அவர்கள் கவலைப்படுகின்றனர்.
“கல்வியாண்டு முன்கூட்டியே முடிவடைவதால் கற்றல் நேரம் குறைந்து 23.4 மில்லியன் மாணவர்கள் பாதிக்கப்படுவர்,” என்று மெக்சிகோ எவாலுசவா பொதுக் கொள்கை சிந்தனைக் குழு எச்சரித்துள்ளது.
கோபர்மெக்ஸ் என்ற வணிகச் சங்கம், இது, அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு என்று விமர்சித்துள்ளது.
“அது குடும்பங்களின் அன்றாடப் பணிகளில் இடையூறுகளை ஏற்படுத்துவதோடு தொழிலாளர் நலனும் பாதிக்கப்படும்,” என்று அச்சங்கம் சொன்னது.

