லண்டன்: ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் (ஐநா) உலக உணவு விலைக் குறியீடு 19 மாதங்களில் ஆக அதிக அளவிற்கு அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாவர எண்ணெய்களின் விலை மிக அதிகமாக அதிகரித்தது இதற்குக் காரணம் என்று டிசம்பர் 6ஆம் தேதி வெளியான புள்ளிவிவரங்கள் கூறின.
ஐநாவின் வேளாண், உணவு அமைப்பு (FAO) தொகுத்து வெளியிடும் இந்த விலைக் குறியீடு, நவம்பர் மாதம் 127.5 புள்ளிகள் உயர்ந்தது. இது 2023 ஏப்ரல் மாதத்திற்குப்பின் பதிவான ஆக அதிக நிலை என்பதுடன் ஓராண்டுக்கு முன்பைவிட 5.7 விழுக்காடு அதிகமாகும்.
ஓராண்டு முன்புடன் ஒப்பிடுகையில், தாவர எண்ணெய் விலைக் குறியீடு 32 விழுக்காடு அதிகரித்தது.
தென்கிழக்காசியாவில் அதிக மழை பெய்ததால் செம்பனை எண்ணெய் உற்பத்தி எதிர்பார்த்ததைவிடக் குறையும் என்ற கவலை நிலவியதே அதற்குக் காரணம்.
அரிசி, கோதுமை போன்ற தானியங்கள், சர்க்கரை போன்ற இதர உணவுகளின் விலையும் வீழ்ச்சி கண்டது.
‘எஃப்ஏஓ’ வெளியிட்ட மற்றோர் அறிக்கையில், உலகெங்கும் தானிய உற்பத்தி சற்றுக் குறையும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இவ்வேளையில், உலகெங்கும் தானியங்களின் பயன்பாடு 0.6 விழுக்காடு அதிகரிக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.