தோக்கியோ: ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் 20ஆம் உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் இம்மாதம் 13 முதல் 21ஆம் தேதிவரை அந்நாட்டின் தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றன.
ஆண்களுக்கான நெடுந்தொலைவு ஓட்டமான மாரத்தான் இறுதிப் போட்டியில் தன்சானியாவின் அல்பொன்ஸ் ஃபெலிக்ஸ் சிம்பு வெற்றிபெற்று தங்கப் பதக்கத்தைப் பெற்றார். நூலிழையில் இரண்டாம் இடத்தில் வெள்ளிப் பதக்க வெற்றியாளர் ஜெர்மனியின் அமனல் பெட்ரோஸ் வந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இருவரும் 42.195 கிலோ மீட்டர் தூரத்தை 2 மணிநேரம் 9 நிமிடம் 48 விநாடிகளில் முடித்ததாக அறிவிக்கப்பட்டது.போட்டியில் நீண்டநேரம் முதலிடத்தில் இருந்த அமனல் கடைசி நொடிகளில் எதிர்பாராமல் தடுமாறி விழுந்தார்.
மூன்றாம் நிலையில் வந்த இத்தாலியின் இலுயாஸ் அவானி வெண்கலப் பதக்கம் பெற்றார்.
போட்டியில் வென்ற 33 வயது சிம்புவுக்கு நெடுந்தொலைவு ஓட்டத்தில் இது முதல் தங்கப் பதக்கமாகும். அவர் 2017ல் லண்டன் நகர் போட்டியில் வெண்கலத்தையும், இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் பாஸ்டன் நகரில் நடந்த ஓட்டத்தில் வெள்ளியும் வென்றது குறிப்பிடத்தக்கது.