பாரிஸ்: இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவுக்குக் கைதாணை பிறப்பிக்க அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் முடிவுக்கு இஸ்ரேலும் அதன் நட்பு நாடுகளும் பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்துள்ளன. மறுபுறம், துருக்கியும் மனித உரிமைக் குழுக்களும் இதனை வரவேற்றுள்ளன.
இஸ்ரேலின் முன்னாள் தற்காப்பு அமைச்சர் யோயேவ் காலண்ட், ஹமாஸ் ராணுவத் தலைவர் முகம்மது டெய்ஃப் இருவருக்கும் நீதிமன்றம் கைதாணை பிறப்பித்தது.
மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள், காஸாவில் ஹமாஸ் மீது இஸ்ரேலின் போர்க் குற்றங்கள் தொடர்பில் இந்தக் கைதாணை பிறப்பிக்கப்பட்டது.
இஸ்ரேலியத் தலைவர்களுக்குக் கைதாணை பிறப்பிக்கப்பட்டதை “சினத்தை ஏற்படுத்தும் செயல்” என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டித்துள்ளார்.
நீதிமன்ற முடிவுக்கு அர்ஜென்டினா அதன் எதிர்ப்பை வெளிப்படுத்தியது. ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தொடர் தாக்குதல்களுக்கு எதிராக இஸ்ரேல் தன்னை தற்காத்துக்கொள்ளும் உரிமையை இந்த முடிவு புறக்கணிப்பதாக அர்ஜென்டின அதிபர் ஜேவியர் மிலெய் கூறினார்.
“இந்த நடவடிக்கை நீதியை நாடுவதில் ஒரு முக்கியப் படி. போரால் ஏற்பட்ட பாதிப்பை நிவர்த்தி செய்ய இது வழிவிடலாம். ஆனால், எல்லா நாடுகளும் இந்த முடிவை ஆதரிக்காவிடில் இதன் தாக்கம் வரையறுக்கப்பட்டதாகவே இருக்கும்,” என ஹமாஸ் அரசியல் பிரிவு உறுப்பினர் பசீம் நயிம் கூறினார்.
ஜோர்தான் பயணத்தின்போது பேசிய ஐரோப்பிய ஒன்றிய வெளிநாட்டுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல், “இது அரசியல் முடிவன்று, இது அனைத்துலக நீதிமன்றத்தின் முடிவு. அதன் முடிவுக்கு மதிப்பளிக்க வேண்டும், அது செயல்படுத்தப்பட வேண்டும்,” என்றார்.
நீதிமன்றத்தின் இந்த முடிவு தாமதாக வந்தது என்றாலும், பாலஸ்தீனத்தில் ரத்தக்களறியை நிறுத்தி, இனப்படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க இது ஆக்ககரமான முடிவு என துருக்கி நீதித்துறை அமைச்சர் யில்மாஸ் துன்க் கருத்துரைத்தார்.
தொடர்புடைய செய்திகள்
திரு நெட்டன்யாகு, திரு காலண்ட் இருவரும் இத்தாலிக்கு வந்தால் அவர்களைக் கைது செய்ய தம் நாட்டுக்குப் பொறுப்பு இருப்பதாக இத்தாலியத் தற்காப்பு அமைச்சர் குய்டோ குரோசெட்டோ சொன்னார். ஆனால், போர்க் குற்றத்தைப் பொறுத்தமட்டில், திரு நெட்டன்யாகுவை ஹமாசுடன் ஒப்பிடுவது “தவறு” என அவர் கருதினார்.