பெர்லின்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வெளிநாட்டுக் கொள்கையை ஜெர்மனிய அதிபர் ஃபிராங்க் வால்டர் ஷ்டையின்மேயர் கடுமையாகச் சாடியுள்ளார்.
நேர்மையற்றவர்கள் வேண்டியதை எல்லாம் திருடிக்கொள்ளும் அளவுக்கு உலக ஒழுங்கு சீர்குலைவதற்கு உலக நாடுகள் அனுமதிக்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
வெனிசுவேலா அதிபர் நிக்கலாஸ் மதுரோவை அமெரிக்கா சிறைபிடித்ததைச் சுட்டுவதுபோலப் பேசிய திரு ஷ்டையின்மேயர், அனைத்துலக ஜனநாயகம் இதுவரை இல்லாத வகையில் தாக்கப்படுகிறது என்றார்.
கிரைமியாவை ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்ததையும் முழுவீச்சில் உக்ரேன்மீது படையெடுத்ததையும் சுட்டிய அவர் அமெரிக்காவின் அண்மைய நடவடிக்கை அதேபோன்ற ஒரு செயல் என்றார்.
அச்சுறுத்தலான சூழல்களில் தலையீடு அவசியமாகிறது என்று கூறிய திரு ஷ்டையின்மேயர், பிரேசில், இந்தியா போன்ற நாடுகள் உலக ஒழுங்கைக் கட்டிக்காக்க முன்வரவேண்டும் என்றார்.

