ஜாசின்: மலாக்காவில் உள்ள கட்டுமானத் தளம் ஒன்றில் வெடிக்காத வெடிகுண்டு ஒன்று புதன்கிழமை (ஜனவரி 14) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஆகாயத்திலிருந்து போடப்படும் ரகத்தைச் சேர்ந்த அந்த 227 கிலோ எடையுள்ள வெடிகுண்டு இரண்டாம் உலகப் போரைச் சேர்ந்தது என்று நம்பப்படுகிறது என்றும் ஜாசின் மாவட்டக் காவல்துறையின் ஆயுதப் பிரிவு நடத்திய தொடக்கக் கட்ட விசாரணையில் அது உறுதிசெய்யப்பட்டது என்றும் ஜாசின் காவல்துறைக் கண்காணிப்பாளர் லே ராபர்ட் கூறினார்.
பிற்பகல் மூன்று மணி வாக்கில் வெடிகுண்டு குறித்து தகவல் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டுமானத் தளத்தில் நிலத்தைத் தோண்டும் பணியில் ஈடுபட்ட 52 வயது ஊழியர் பெம்பான் காவல்துறை நிலையத்திற்குத் தகவல் சொன்னதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
பெம்பானில் உள்ள கம்போங் ஆயிர் பனாஸ் என்ற கட்டுமானத் தளத்தில் வெடிகுண்டு போன்ற ஒரு மர்மப் பொருளைக் கண்டதாகக் காவல்துறை அதிகாரிகளிடம் ஊழியர் ஒருவர் கூறினார்.
தகவலறிந்து ஆயுதப் பிரிவைச் சேர்ந்த குழு சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டதாக ஜாசின் காவல்துறைக் கண்காணிப்பாளர் லே ராபர்ட் சொன்னார்.
“வெடிகுண்டின் சுற்றளவு 27 சென்டிமீட்டரிலிருந்து 35 சென்டிமீட்டருக்கு இடைப்பட்டிருந்தது. அதன் நீளம் 1.15 மீட்டர்,” என்றார் அவர்.
வெடிகுண்டு துருப்பிடித்த நிலையில் அது வெடிக்கக்கூடியதாக இருந்தது என்று கூடுதல் சோதனைகள் மூலம் கண்டறியப்பட்டது.
வியாழக்கிழமை (ஜனவரி 15) காலை 8 மணிக்குப் பாதுகாப்பான சூழலில் வைத்து வெடிகுண்டை வெடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார் திரு லீ.
தொடர்புடைய செய்திகள்
சுற்றியுள்ளோரின் பாதுகாப்பைக் கருதி பொதுமக்கள் தேவையில்லாத வதந்திகளைப் பரப்பவேண்டாம் என்றும் திரு லீ அறிவுறுத்தினார்.

